தென் ஆப்ரிக்கா உடனான கடைசி இரண்டு ஒன் டே மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு
தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் ரவிந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று சர்வதேச 'டுவென்டி-20', ஐந்து ஒருநாள் மற்றும் நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதலில் நடந்த 'டுவென்டி-20' தொடரை இந்திய அணி இழந்தது. தற்போது ஒருநாள் போட்டிகள் நடக்கின்றன. இந்நிலையில் முதல் டெஸ்ட் வரும் நவ. 5ல் மொகாலியில் துவங்குகிறது. மீதமுள்ள போட்டிகள் பெங்களூரு (நவ. 14-18), நாக்பூர் (நவ. 25-29), புதுடில்லி (டிச. 3-7) நகரங்களில் நடக்கவுள்ளன.முதலிரண்டு டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய வீரர்களின் தேர்வு, பி.சி.சி.ஐ., தேர்வுக்குழு தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையில் இன்று டில்லியில் நடந்தது. இதில் 'ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், சமீபத்தில் முடிந்த இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தேர்வு செய்யப்படவில்லை. தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக கான்பூரில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் காயமடைந்த அஷ்வின் தேர்வு செய்யப்படவில்லை. கடைசி இரண்டு ஒருநாள் போட்டியில் விளையாடும் இந்திய அணியில் உமேஷ் யாதவ் நீக்கப்பட்டு ஸ்ரீநாத் அரவிந்த் சேர்க்கப்பட்டார். டெஸ்ட் அணி: விராத் கோஹ்லி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவான், புஜாரா, அஜின்கியா ரகானே, ரோகித் சர்மா, விரிதிமன் சகா, ரவிந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், லோகேஷ் ராகுல், ஸ்டூவர்ட் பின்னி, வருண் ஆரோன், இஷாந்த் சர்மா. ஒருநாள் அணி: தோனி (கேப்டன்), அஷ்வின், ஸ்டூவர்ட் பின்னி, ஷிகர் தவான், விராத் கோஹ்லி, புவனேஷ்வர் குமார், அக்சர் படேல், அஜின்கியா ரகானே, ரெய்னா, அம்பதி ராயுடு, மோகித் சர்மா, ரோகித் சர்மா, ஸ்ரீநாத் அரவிந்த், குர்கீரத் சிங், அமித் மிஸ்ரா.