உலக கோப்பை கால்பந்து: இந்திய அணி தோல்வி
ஆஷ்காபத்: துர்க்மெனிஸ்தான் அணிக்கு எதிரான உலக கோப்பை கால்பந்து தகுதிச்சுற்றில் இந்திய அணி 1–2 என, வீழ்ந்தது. வரும் 2018ல் ‘பிபா’ உலக கோப்பை கால்பந்து தொடர் ரஷ்யாவில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் ஆசிய அணிகள் இடையிலான இரண்டாவது பிரிவு தகுதிச்சுற்று தற்போது நடக்கிறது. ‘டி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது இந்திய அணி. இதில் ஓமன் (1–2), கயாம் (1–2) மற்றும் ஈரான் (0–3) என, பங்கேற்ற மூன்று போட்டிகளிலும் தோற்று, இன்னும் புள்ளிக்கணக்கைத் துவக்காமல் கடைசி இடத்தில் உள்ளது. தற்போது 167 வது இடத்தில் இருக்கும் இந்திய அணி, நான்காவது லீக் போட்டியில் 155வது இடத்தில் உள்ள துர்க்மெனிஸ்தானை (1 புள்ளி) அதன் சொந்தமண்ணில் நேற்று சந்தித்தது. இதில் கட்டாய வெற்றி அல்லது ‘டிரா’ செய்தால் மட்டுமே, அடுத்த சுற்று வாய்ப்பு குறித்து யோசிக்க முடியும் என்ற நிலையில் களமிறங்கிய இந்திய அணிக்கு 8வது நிமிடத்தில் அபேலோ ஒரு கோல் அடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு 28 வது நிமிடத்தில் ஜீஜே பதிலடி கொடுத்தார். கோல்கட்டாவுக்கு எதிரான ஐ.எஸ்.எல்., லீக் போட்டியில், சென்னை அணிக்காக முதல் கோல் அடித்த இவர் நேற்றும் ஒரு கோல் அடித்தார். 43வது நிமிடத்தில் இந்திய வீரர் பிரீதம் அடித்த பந்து கோல் போஸ்ட்டுக்கு மேலாக செல்ல, முதல் பாதி 1–1 என, சமனில் முடிந்தது. இரண்டாவது பாதியில் 60வது நிமிடத்தில் அமானவ் ஒரு கோல் அடிக்க, இந்திய அணி 1–2 என, பின்தங்கியது. இதை சமன் செய்ய இந்திய வீரர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வீணாகின. முடிவில், இந்திய அணி 1–2 என்ற கோல்கணக்கில் வீழ்ந்தது. தொடர்ந்து நான்கு தோல்விகளை சந்தித்த இந்திய அணி, தனது அடுத்த போட்டியில் வரும் 13 ம் தேதி ஓமனை மீண்டும் சந்திக்கிறது. உலக கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச் சுற்றில் இந்தியா, துர்க்மெனிஸ்தான் அணிகள் மோதிய போட்டி, நேற்று நேரடி ஒளிபரப்பு செய்யப்படவில்லை. மாறாக, உள்ளூர் தொடரான ஐ.எஸ்.எல்., தொடரை ஒளிபரப்பு செய்தனர். தேசிய அணி பங்கேற்கும் போட்டியைக் கூட ஒளிபரப்பவில்லை என்றால் இந்திய மண்ணில் கால்பந்து எப்படி வளர்ச்சியடையும்