ஐ.எஸ்.எல் கால்பந்தாட்ட தொடர் சென்னை அணிக்கு முதல் வெற்றி







கோவா: கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில், மென்டோசா ‘ஹாட்ரிக்’ கோல் அடித்து கைகொடுக்க, சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடரின் 2வது சீசன் நாட்டின் முக்கிய நகரங்களில் நடக்கிறது. கோவாவில் நேற்று நடந்த 9வது லீக் போட்டியில், விராத் கோஹ்லி சக உரிமையாளராக உள்ள கோவா அணி, ‘பாலிவுட் நடிகர்’ அபிஷேக் பச்சன், தோனி சக உரிமையாளர்களாக இருக்கும் சென்னை அணியை சந்தித்தது.      துவக்கத்தில் இருந்து சென்னை அணியின் ஆதிக்கம் மேலோங்கி இருந்தது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் சென்னை அணியின் மத்திய கள வீரர் எலானோ புளூமர் ‘பாஸ்’ செய்த பந்தில், முன்கள வீரர் ஸ்டீவன் மென்டோசா கோலடிக்க முயற்சித்தார். அதனை தடுக்க முயன்ற கோவா அணியின் கோல்கீப்பர் எலின்டன் பந்தை நழுவவிட்டார். அப்போது அருகில் இருந்த மென்டோசா மீண்டும் முயற்சித்து முதல் கோல் அடித்தார்.      பின், 13வது நிமிடத்தில் கிடைத்த ‘பிரி கிக்’ வாய்ப்பில் எலானோ அடித்த பந்தை கோவா அணியினர் தலையால் முட்டி தடுத்தனர். கோவா அணிக்கு 17வது நிமிடத்தில் கிடைத்த ‘கார்னர்’ வாய்ப்பு வீணடிக்கப்பட்டது. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் கோவா வீரர் லியோனார்டு மவுராவுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. இந்நிலையில் 43வது நிமிடத்தில் சென்னை அணியின் ஜெயேஷ் ரானே ‘பாஸ்’ செய்த பந்தில் எலானோ கோலடித்து அசத்தினார். இதற்கு கோவா அணியினரால் பதிலடி கொடுக்க முடியவில்லை. முதல் பாதி முடிவில் சென்னை அணி 2–0 என முன்னிலை வகித்தது.      மென்டோசா அபாரம்: இரண்டாவது பாதியின் 63வது நிமிடத்தில் எலானோ ‘பாஸ்’ செய்த பந்தில் மென்டோசா 2வது கோல் அடித்தார். தொடர்ந்து அசத்திய மென்டோசா, 75வது நிமிடத்தில் புரூனோ பெலிசாரி ‘பாஸ்’ செய்த பந்தில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்தார். ஆட்டத்தின் 85வது நிமிடத்தில் சென்னை அணியின் பிளாசிக்கு மஞ்சள் அட்டை கிடைத்தது. கடைசி நிமிடம் வரை போராடிய கோவா அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சென்னை அணி 4–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் இத்தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்தது. முன்னதாக கோல்கட்டா, டில்லி அணிகளிடம் வீழ்ந்தது. இரண்டாவது வீரர் அபாரமாக ஆடிய சென்னை அணியின் ஸ்டீவன் மென்டோசா, ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடரில் ‘ஹாட்ரிக்’ கோல் அடித்த இரண்டாவது வீரர் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன், கடந்த ஆண்டு நடந்த தொடரில் புனே அணிக்கு எதிரான லீக் போட்டியில் மும்பை அணியின் ஆன்ட்ரி மோரிட்ஸ் (பிரேசில்) இச்சாதனை படைத்தார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad