துப்பாக்கி குண்டுகளை போல இந்தியா மீண்டும் சீறிப்பாயும்: ரோஹித் சர்மா
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவோம் என்று ரோஹித் சர்மா நம்பிக்கை தெரிவித்துள்ளார். தரம்சாலாவில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிராக முதல் டி20 போட்டியில் தென் ஆப்பிர்க்கா 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா சதம் அடித்து மிரட்டினார். இதனால் இந்திய அணி 199 ரன்கள் குவித்தது. இருப்பினும் தென்ஆப்பிரிக்கா 200 ரன்களை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி இன்று கட்டாக்கில் நடக்கிறது. இந்த 2வது டி20 பற்றி தொடக்க வீரர் ரோஹித் சர்மா கூறுகையில், "முதல் டி20 போட்டியில் தோல்வியடைந்தது மிகவும் துரதிருஷ்டவசமானது. அந்தப் போட்டி அருமையாக அமைந்தாலும், எனக்கு மிகவும் ஏமாற்றமாக அமைந்தது. நீங்கள் சதம் அடித்தாலும் அந்தப் போட்டியில் வெற்றி பெறாவிட்டால் உங்களுடைய திறமை கணக்கில் ஏற்றுக்கொள்ள மாட்டாது. இருப்பினும் எனக்கு இது பிரச்சனை இல்லை. சில விடயங்களை மாற்றம் செய்து துப்பாக்கில் இருந்து சீறும் குண்டுகள் போல் திறமைகளை வெளிக்காட்டுவோம். மீண்டும் நாங்கள் வலுமையான நிலைக்கு திரும்புவோம் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.