எதிர்காலம் தானியங்கள் விளைவிக்கும் நாடுகளுக்கே; ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளுக்கு இல்லை!'
வரும் காலங்கள் தானியங்கள் அதிகம் விளைவித்து இருப்பு வைத்துள்ள நாடுகளுக்குத்தான் சொந்தம் என்றும், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் வைத்துள்ள நாடுகளுக்குச் சொந்தம் ஆகாது என்றும் வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.வாஷிங்டன்னில் சிந்தனையாளர்கள் மாநாட்டில் இது தொடர்பாக ஆய்வுக் கட்டுரை ஒன்றைச் சமர்ப்பித்துப் பேசிய அவர், " உலகில் வேளாண்மைத்துறைக்கு மிக அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அறிவியலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும். அறிவியல் அமைப்புகளுக்கு அதிகமான சுயாட்சி அதிகாரம் இருக்க வேண்டும். பட்டினியற்ற சமுதாயத்தை உருவாக்க பொதுக் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.
இனிமேல், தானியங்கள் நிறைந்த நாடுகளுக்கே எதிர்காலம், துப்பாக்கிகள் அதிகம் வைத்துள்ள நாடுகளுக்கல்ல. இந்தியாவில் விவசாயத்துக்கு உரிய கவனிப்பு அளிக்கப்படுவதில்லை. இதுதொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடியின் நோக்கங்கள் நல்லதாகவே இருக்கின்றன. ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவதில் அந்த நோக்கத்தின் பிரதிபலிப்பு இல்லாமல் போய்விடுகின்ற சூழல் உள்ளது. குறிப்பாக, மக்களின் அத்தியாவசியத் தேவைகளை அவர்களுக்கு செலவே இல்லாமல் பூர்த்தி செய்து வரும் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சமூக நல திட்டங்களைப் போல், நல்ல திட்டங்களின் மூலம் சமூகப் பாதுகாப்பை நிலைநிறுத்தி, அதை உறுதிப்படுத்தவும் வேண்டும்.நீடித்த முன்னேற்றம் என்ற இலக்கினை அடைவதற்கு ஆரோக்கியமான பெருங்கடல்களின் நீராதாரம் மிகவும் முக்கியமானது. நமது பூமியில் 97 சதவீதம் நீர் சூழ்ந்துள்ளது. எனவே, இயற்கை வளங்களை பாதுகாத்து, தீவிரமாக உழைத்தால் ஏராளமான உணவுப்பொருட்களை விளைவிக்க நம்மால் முடியும். சரியான சேமிப்பு முறைகள் பின்பற்றப்படாததால் உணவுப்பொருட்கள் வீணாவது அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இதன்மீது அதிகக் கவனம் செலுத்தி, உணவுப்பொருள்களின் இழப்பைத் தடுப்பது தொடர்பான நடவடிக்கைகளில் நாம் முதலில் கவனம் செலுத்த வேண்டும்" என்று கூறினார்.