ரோஹித் சர்மாவின் கவலை: சோகமான சாதனைப் பட்டியலில் சச்சின், கெய்ல், சங்கக்காரா
அதிரடியாக விளையாடி சதமடித்தும் தனது அணி தோல்வியைத் தழுவுவது வீரர்களுக்கும் மிகவும் சோகமான விடயம் ஆகும். சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக தரம்சாலாவில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியா அதிரடியாக விளையாடி 199 ரன்கள் எடுத்தது. இந்தப் போட்டியில் ரோஹித் (106) சதம் அடித்தும் இந்தியா தோற்றது. இதன் மூலம் டி20 போட்டியில் சதம் அடித்தும் தனது அணி தோல்வியை தழுவும் 14 வீரர்களை கொண்ட பட்டியலில் ரோஹித் 3வது இடத்தை பிடித்தார். முன்னதாக 2007ம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை டி20 போட்டியில் ஜோகன்னஸ்பர்க்கில் நடந்த ஆட்டத்தில் இது போன்று கெய்லுக்கு நடந்தது. தென் ஆப்பிரிக்கா- மேற்கிந்திய தீவுகள் மோதிய அந்த ஆட்டத்தில் கெய்லின் (117) அதிரடி சதத்தால் மேற்கிந்திய தீவுகள் 205 ரன்கள் எடுத்தது. ஆனால் தென் ஆப்பிரிக்கா 18 ஓவர்களிலே இலக்கை எட்டி வெற்றி பெற்றது. இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் அதே மைதானத்தில் நடந்த டி20 போட்டியில் மேற்கிந்திய தீவுகள்- தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. இதில் தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் டுபிளசி (119) சதம் அடித்தார். இதனால் தென் ஆப்பிரிக்கா 231 ஓட்டங்கள் குவித்தது. ஆனால் அதிரடி ஆட்டத்தை காட்டிய கெய்ல் (90), சாமுவேல்ஸ் (60) மேற்கிந்திய தீவுகள் அணியை வெற்றி பெற வைத்தனர். இந்த வகையில் இந்திய அணியின் அதிரடி வீரர் ரோஹித் 3வது வீரராகவும், இந்த வருடத்தில் 2வது வீரராகவும் உள்ளார். அதே சமயம் ஒருநாள் போட்டியில் இந்த சோகமான சாதனை பட்டியலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் இருக்கிறார். இவர் சதம் அடித்து 14 போட்டிகளில் இந்திய அணி தோல்வியைத் தழுவியது. அதே போல் கிறிஸ் கெய்ல் (9) 2வது இடத்திலும், சங்கக்காரா (7), பிரண்டன் டெய்லர் (7), ரோஸ் டெய்லர் (7) ஆகியோர் 3வது இடத்திலும் உள்ளனர்.