ரசிகர்களின் அநாகரிக செயலுக்கு தென் ஆப்ரிக்கா கேப்டன் டுப்லேசிஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்
கட்டாக் கிரிக்கெட் போட்டியின் போது ரசிகர்கள் பாட்டில்களை வீசி ரகளையில் ஈடுபட்டதற்காக தென்ஆப்ரிக்க அணியின் கேப்டன் டுப்லெசி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், '' கடந்த 5 ஆண்டு காலமாக இந்தியாவில் நான் கிரிக்கெட் விளையாடி வருகிறேன். இது போன்ற ஒரு சம்பவத்தை கண்டதில்லை. இங்கே போட்டிக்காகத்தான் வந்துள்ளோம். சிறந்த அணி வெற்றி பெறுகிறது. இன்னும் 5 ஒருநாள் போட்டிகள் உள்ளன. இது போன்ற இன்னொரு சம்பவத்தை நான் பார்க்க விரும்பவில்லை. இந்த சுற்றுப்பயணத்தில் இதுதான் முதலும் கடைசியுமாக இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன். '' என்றார். இந்திய கேப்டன் தோனி, '' விசாகப்பட்டினத்தில் ஒரு முறை இந்திய அணி மிக எளிதாக வெற்றி பெற்றது. அப்போதும் ரசிகர்கள் பாட்டில்களை வீசி தகராறில் ஈடுபட்டனர். அதனால் இது போன்ற சம்பவங்களை சீரியசாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை'' என தெரிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர், ஒடிசா மாநில காவல்துறையினரை இந்த சம்பவத்திற்காக குறை கூறியுள்ளார்.