சத்யம் சினிமாஸுடன் பேசும் 'நாசர், விஷால் குழு'... இதைத்தானே அவங்களும் செஞ்சாங்க
சென்னை: நடிகர் சங்க கட்டட குத்தகை விவகாரம் பற்றி பேச்சு நடத்த நாசர், விஷால் அடங்கிய 2 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. நடிகர் குமரி முத்துக்கு எதிராக நடிகர் சங்கம் தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்படுகிறது. நடிகர் சங்க தேர்தலில் வெற்றிபெற்று புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்துள்ளனர். தலைவராக நாசரும் பொதுச்செயலாளராக விஷாலும் பொருளாளராக கார்த்தியும் துணைத் தலைவர்களாக பொன் வண்ணன், கருணாஸ் ஆகியோரும் பதவியேற்றுள்ளனர். நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டடம் கட்டுவதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன. நடிகர் சங்க கட்டடம் கட்டுவது தொடர்பாக எஸ்.பி.ஐ சினிமாவுடன் போடப்பட்ட குத்தகை ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்று ஏற்கனவே விஷால் அணியினர் அறிவித்து இருந்தனர். இது சம்பந்தமாக அந்த நிறுவனத்துடன் பேச்சு வார்த்தை நடத்த தற்போது நாசர், விஷால் அடங்கிய 2 பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இதைத்தானே சரத் அணியும் செய்தது?
இதற்கு முன் நிர்வாகத்தில் இருந்த சரத்குமாரும் ராதாரவியும் செய்ததைத்தான் இப்போது விஷால், நாசர் செய்கிறார்கள். சரத், ராதாரவி இருவர் மட்டுமே சத்யம் சினிமாவுடன் பேசினார்கள், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்கள் என்று குற்றம் சாட்டினர் விஷால் அணியினர். ஆனால் இப்போது புதிய நிர்வாகமும், தலைவர் - செயலாளர் ஆகிய இருவர் மட்டும் சத்யம் நிறுவனத்துடன் பேசினால் போதும் என ஒப்புதல் தந்துள்ளது கவனிக்கத்தக்கது.