நடிகர் சங்கத் தேர்தல்: கமல் சகோதரர் சாருஹாசனின் ஆதங்கம்!





கமல்ஹாசனின் சகோதரரும், நடிகருமான சாருஹாசன், நடந்து முடிந்த தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் பற்றியும், தமிழக சினிமா ரசிகர்களின் மோகத்திற்கு எதிராகவும் காட்டமான கருத்தை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.  அதில், "நான் சங்கத்தின் ஆயுள் சந்தாதாரர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலுக்கு நான் செல்லவில்லை. அவர்கள் என்னை ஒரு நடிகனாக ஏற்று கொண்டதில்லை. நானும் சினிமாவை, இந்தியனின் பெருமையை வளர்க்கும் ஒரு சமூக நல தொண்டு நிறுவனமாக கருதுவதில்லை. வக்கீல் தொழில் செய்யும்போது ஓரளவு ஆங்கிலம் பேசியது தொழில் வளர்ச்சிக்காக. அதை தவிர எனக்கு தமிழ் ஒன்றுதான் பேசத்தெரியும்.  சினிமா தொழிலில் நான் அதிகம் நடிக்க அழைக்கப்பட்டதே இல்லை.  மலையாள, கன்னட சினிமாக்களில்தான் அழைப்பார்கள். தமிழ் சினிமாவின் நடப்பு, வேறு மொழியிலிருந்து வந்தவர்களைத்தான் சிறந்த நடிகர்களாக ஒப்புக்கொள்வது. அந்த காலத்தில் மலையாளத்தை தாய்மொழியாக கொண்ட எம்ஜிஆர் அவர்கள். அதன் பின் அந்த அளவு சிறந்து விளங்கியது நமது சூப்பர் ஸ்டார்.  மற்ற மொழி நடிகர்கள்தான் அதிகம் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். மதத்தில் கூட தமிழ் கடவுளைவிட வட இந்தியாவின் யாதவ கடவுளைத்தான் சிறப்பாக வணங்குகிறார்கள். தமிழக மக்கள் தங்கள் உழைப்பின் சரிபாதியை சினிமா கொட்டகைகளுக்கு கொடுத்து அரை வயிறு நிரப்பி பள்ளிகளை விட, சினிமாவுக்கு செல்பவர்கள் அதிகமானதால் சினிமா ஆட்சி வந்திருக்கிறது. நேற்று காலையில் ஜன்னல் திறந்தவுடன் சென்னையில் கிரிக்கெட் இருக்கைகள் விற்று போய்விட்டன. அனேகமாக சினிமா ஆட்சி முடிந்தவுடன் ஒரு கிரிக்கெட் ஓபனிங் பேட்ஸ்மன் முதல் மந்திரியாகவும், வேகப்பந்து வீச்சாளர் நிதி மந்திரியாகவும் ஆகலாம். நாடு உருப்படுமா?  மன்னித்து விடுங்கள்.. கல்லூரி கிரிக்கெட்டில் மூன்று கல்லூரிகளிலும் நான்  ஒரு வேகப்பந்து வீச்சாளன். ஒரு கல்லூரியில் கிரிக்கெட் கேப்டன்.  பின்னாளில் நடிகன்.. நீங்கள் ஒப்புக்கொள்ளாத ஒரு தேசிய விருதும், பிலிம் ஃபேர் விருதும் பெற்றவன்.  என்னை யாரும் யோசனை கேட்கப் போவதில்லை. நானும் ஒரு நலிந்த நடிகன்தான். நடிகர் சங்க தேர்தல் முடிந்ததும் இரு கட்சி பெரியவர்களும் கூடி பேசி, என் போன்ற சிலகாலமே உயிருடன் இருக்க போகிறவர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டு நல்ல முடிவுகளை எடுக்க வேண்டும்.  நான் நடிகர் சங்க வாக்கு சாவடி வரை நடக்க முடியாதவன்... தேர்தலை தொலைக்காட்சி மூலம்தான் பார்க்கிறேன். ஜெயிப்பவர்களுக்கு  பெரிய சுமை காத்திருக்கிறது... தாங்கும் திறமை வரும்படி வாழ்த்துகிறேன்.... வாழ்த்த வயது மட்டும்தான் இருக்கிறது... வளர்க்கும் தகுதி இல்லை... நம் சூப்பர்ஸ்டார் அவர்கள், பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள்... தேர்தலுக்கு பேசவந்தவர்... திராவிடநாடு கேட்டு விட்டு போனது போல்..... தமிழ்நாட்டு நடிகர் சங்கம் என்று பெயர் மாற்றச் சொல்லிவிட்டு போய்விட்டார். பின்னால் வந்த கமல்ஹாசன் செளத் இண்டியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷனை இண்டியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன் என்று மாற்ற இன்னொரு யோசனை சொல்கிறார்...  இன்றைய சினிமா ரசிகர்கள், “இந்த உலகநாயகனின் தந்தை சுதந்திர போராட்ட வீரராமே? இன்றைய ஆட்சியில் உள்ள லஞ்ச ஊழலுக்கு சுதந்திரம்தான் காரணம். வெள்ளையர்களை திரும்ப அழையுங்கள் என்று சொன்னாலும் சொல்லுவார்கள்... உலகநாயகன் தன் யோசனைகளை வெளியே விடாமல் வைத்துக் கொள்வது என் யோசனை... ஒரு வேளை சொல்லித்தான் ஆகவேண்டும் என்று நினைத்தால்... 'இந்தியன் ஆர்டிஸ்ட் அசோசியேஷன் என்று வைத்திருந்தால் நல்லாயிருக்கும்' என்று மாற்றிக் கொள்ளவும்" என்று கூறியுள்ளார்.



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad