அஜித் மீது விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது கருணாஸ் சொல்கிறார்
தென்னிந்திய நடிகர் சங்கத்தில் துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கருணாஸ் தனது ட்விட்டரில் அஜித்தைப் பற்றி தவறான கருத்துகளை பதிவிட்டிருந்ததையொட்டி சர்ச்சைகள் எழுந்தன. அதன் எதிரொலியாக போலீஸில் புகார் கொடுக்கவிருக்கிறார் கருணாஸ்.நடிகர் சங்கத் தேர்தலின் போது இரு அணியினரையும் சந்திக்க மறுத்துவிட்டார் அஜித். அதுமட்டுமில்லாமல் தேர்தலின் போது ஓட்டுப் போடவும் அவர் வரவில்லை. இதன் காரணமாக கருணாஸ் தனது ட்விட்டரில், “ நடிகர் சங்கம் சார்பாக கலை நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் நடந்தால், அஜித்தை அழைப்பதில்லை என்றும், எந்த சிறு உதவிக்கும் அவர் வீட்டு வாசல் படியை மிதிக்கக் கூடாது" என்றும் கருத்தை வெளியிட்டார்.
இந்தக் கருத்தினால் பெரும் பரபரப்பும், சர்ச்சையும் ஏற்பட்டது. அஜித் ரசிகர்கள் கருணாஸூக்குக் கடும்எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதற்கு கருணாஸ் விளக்கம் கொடுத்துள்ளார். “என்னுடைய ட்விட்டர் கணக்கில் நடிகர் அஜித்தை பற்றி நான் அவதூறாக செய்திகளைக் கூறியதாக இன்று செய்தி வெளிவந்திருக்கிறது. இது முற்றிலும் தவறான செய்தியாகும். யாரோ விஷமிகள் என்னுடைய ட்விட்டர் கணக்கில் இப்படி ஒரு தவறான முறையற்ற செய்தியை வெளியிட்டுள்ளனர். ஆரம்ப காலகட்டம் முதல் இன்று வரை நான் அனைத்து நடிகர் நடிகைகளுடன் நட்பாக பழகி வந்துகொண்டிருக்கிறேன். யார் மீதும் எனக்கு தனிப்பட்ட முறையில் விரோதமோ காழ்ப்புணர்ச்சியோ கிடையாது. இந்நிலையில் இப்படி ஒரு செய்தி வந்ததை அறியும் போது மிகவும் அதிர்ச்சியாக இருக்கிறது. இது பற்றி நாளை கமிஷனரிடம் முறையாக புகார் அளிக்கவுள்ளேன்” என்று கருணாஸ் கூறியுள்ளார்.