கோஹ்லியின் சாதனையை முறியடித்த அம்லா
இந்தியாவுக்கு எதிரான 5வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்க வீரர் அம்லா 6000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான கடைசி ஒருநாள் போட்டி மும்பையில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் வரும் தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்க வீரராக ஹசிம் அம்லா களமிறங்கினார். அவர் 15 ரன்கள் எடுத்த போது ஒருநாள் போட்டிகளில் 6000 ரன்களை கடந்தார். இதன் மூலம் குறைவான இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை எட்டிய விராட் கோஹ்லியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். முன்னதாக கோஹ்லி 136 இன்னிங்சில் 6000 ரன்களை கடந்திருந்தார். இந்த சாதனையை அம்லா 123 போட்டியில் எட்டி கோஹ்லியின் சாதனையை முறியடித்துள்ளார். இந்த சாதனை பட்டியலில் விவன் ரிச்சார்ட்ஸ் (141 இன்னிங்சில்) 3வது இடத்திலும், கங்குலி (147 இன்னிங்ஸ்) 4வது இடத்திலும் டிவில்லியர்ஸ் (147 இன்னிங்ஸ்) 5வது இடத்திலும் உள்ளனர்.