திவாரியை அடிக்க பாய்ந்த கம்பீர்.. தடுக்க வந்த நடுவருக்கும் இடி: மைதானத்தில் பரபரப்பு
ரஞ்சிக் கோப்பை போட்டியில் டெல்லி அணியின் தலைவர் கவுதம் கம்பீரும், பெங்கால் அணியின் தலைவர் மனோஜ் திவாரியும் மோதிக் கொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஞ்சிக் கோப்பைத் தொடரின் நான்காவது சுற்று லீக் போட்டிகள் தற்போது நடக்கின்றன. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் நடக்கும் போட்டியில் டெல்லி, பெங்கால் அணிகள் மோதுகின்றன. இதில் 3வது நாளான நேற்று பெங்கால் அணி முதல் இன்னிங்சை விளையாடியது. அப்போது சாட்டர்ஜி ஆட்டமிழந்த போது பெங்கால் அணித்தலைவர் மனோஜ் திவாரி தொப்பியுடன் களமிறங்கினார். ஆனால் வேகப்பந்துவீச்சாளர் மனன் சர்மா அந்த ஓவரை வீச தயாராக இருந்தார். பின்னர் மனன் சர்மாவை கையை காட்டி நிற்கும் படி கூறிய திவாரி, பெவிலியனை நோக்கி பாதுகாப்புக்காக ‘ஹெல்மெட்’ கொண்டு வருமாறு ‘சிக்னல்’ செய்தார். இது நேரத்தை கடத்தும் செயல் என்பதை உணர்ந்த டெல்லி வீரர்கள் கோபத்தில் இருந்தனர். தொடர்ந்து திவாரி, மனன் சர்மாவை பொறுமையாக இருக்கும் படி கூறினார். இதைத் தொடர்ந்து கோபத்தின் உச்சத்திற்கு சென்ற டெல்லி அணித்தலைவர் கம்பீர், திவாரியை நோக்கி திட்ட ஆரம்பித்தார். மேலும், 'போட்டி முடிந்ததும் வெளியே வா உன்னை அடிக்கிறேன்' என்றார். அதற்கு 'போட்டி முடியும் வரை ஏன் காத்திருக்க வேண்டும். இப்போதே வா ஒரு கை பார்த்து விடலாம்' என்று பதிலளித்துள்ளார் திவாரி. இதனால் திவாரியை அடிக்க பாய்ந்திருக்கிறார் காம்பிர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த நடுவர் ஸ்ரீநாத், வேகமாக ஓடி வந்து இருவருக்கும் இடையில் புகுந்தார். ஆனால் காம்பிர், நடுவர் ஸ்ரீநாத்தையும் பிடித்து தள்ளி விட்டார். பின்னர் நடந்த இது தொடர்பான விசாரணையில் போட்டி சம்பளத்தில் இருந்து காம்பிருக்கு 70 சதவீதமும், திவாரிக்கு 40 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் விதிகளின் படி நடுவர்களை தொடுவது மிகப் பெரும் குற்றமாகும். இப்படிப்பட்ட நிலையில் நடுவர் ஸ்ரீநாத்தை பிடித்து கீழே தள்ளிய காம்பிருக்கு பெரியளவில் தடை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெறும் அபராதத்துடன் அவர் தப்பினார்.