இந்திய அணியில் இருந்து ஷேவாக் நீக்கப்பட்டதற்கு தோனி காரணமா?
இந்திய அணித்தலைவர் தோனி பற்றி சமீபத்தில் ஓய்வு பெற்ற அதிரடி வீரரான ஷேவாக் மனம் திறந்து பேசியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரராக வலம் வந்த ஷேவாக், தனது 37வது பிறந்த நாள் அன்று சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் ஷேவாக்கிற்கும் அணித்தலைவர் தோனிக்கும் பிரச்சனை இருந்ததாகவும், அவர் தான் ஷேவாக்கை அணியில் இருந்து நீக்கியதாகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இது பற்றி கருத்து தெரிவித்த ஷேவாக், தோனி இதை செய்திருப்பார் என்று நான் நினைக்கவில்லை. அவர் நல்ல இதயம் படைத்த மனிதர். அவர் முதன்முதலாக தலைவர் பொறுப்பு ஏற்றவுடன் அவரது தலைமையின் கீழ் ஆடிய மூத்த வீரர்களான நாங்கள் அவருக்கு ஆலோசனைகள் வழங்கினோம். இதனை அவர் உடனடியாக நடைமுறைப்படுத்தியும் உள்ளார். இதனால் நமது அணி அவரது தலைமையில் டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் வெற்றி கண்டது. இவையெல்லாம் ஊடகங்களின் கணிப்புகள். அப்படி இருந்திருந்தால் நான் இன்னும் முன் கூட்டியே அணியிலிருந்து நீக்கப்பட்டிருப்பேன். எனவே அணியிலிருந்து நான் நீக்கப்படுவதற்கு தோனி தான் காரணம் என்று கூறப்பட்ட கருத்து தவறு என்றே நான் கருதுகிறேன். மேலும் ,தோனி அடுத்த உலகக்கோப்பை வரை தலைவராக செயல்பட வேண்டும். அப்படி செயல்பட்டால், அவரால் சிறந்த அணியை உலகக்கோப்பை போட்டிக்கு எடுத்துச் செல்ல முடியும்" என்று தெரிவித்துள்ளார்.