Matrimony OTT-Platforms Jobs Coupons Business

தோல்வி எதிரொலி: மும்பை ஆடுகள வடிவமைப்பாளரிடம் ரவி சாஸ்திரி தகராறு செய்ததாகப் புகார்!






இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்க அணி மூன்று டி-20, 5 ஒரு நாள் போட்டி, 4 டெஸ்ட் போட்டி கொண்ட கிரிக்கெட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் டி-20 தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒரு நாள் தொடரை 3-2 என்ற கணக்கிலும் அந்த அணி கைப்பற்றியுள்ளது.  மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 5-ஆவது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் தொடக்க வீரர் குவின்டன் டி காக், ஃபாப் டு பிளெஸ்ஸிஸ், கேப்டன் ஏபி டி வில்லியர்ஸ் அதிரடியாக விளையாடி தலா ஒரு சதம் அடித்தனர். இதனால், தென் ஆப்பிரிக்க அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.  சென்னையில் நடந்த ஒருநாள் போட்டியின்போது ஆடுகளம் ஸ்பின்னர்களுக்குச் சாதகமாக அமைந்தது. ஆனால், மும்பை வான்கடே ஆடுகளம், பேட்டிங் விக்கெட்டாக இருந்தது இந்திய அணிக்குப் பின்னடைவாகப் போனது. இப்போட்டியில் இந்திய அணியின் பந்துவீச்சு எடுபடவில்லை. குறிப்பாக புவனேஷ்வர் குமார் 10 ஓவர்களில் 106 ரன்கள் வழங்கி ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றினார். மோஹித் சர்மா, ஹர்பஜன் சிங், அமித் மிஸ்ரா ஆகியோரும் 70 ரன்களுக்கு மேல் வாரி இறைத்தனர்.  போட்டி முடிவடைந்தபிறகு இந்திய அணியின் இயக்குநர் ரவி சாஸ்திரியும் பவுலிங் பயிற்சியாளர் பி. அருணும், வான்கடே மைதானத்தின் ஆடுகள வடிவமைப்பாளர் சுதிர் நாயக்கிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. பேட்டிங் பிட்சை வடிவமைத்து தென் ஆப்பிரிக்கா மிகப் பெரிய ரன் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்துவிட்டீர்கள் என்று ரவி சாஸ்திரி சுதிரைக் கண்டித்து, தகாத வார்த்தைகளால் கடிந்துகொண்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ரவி சாஸ்திரி இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளார்.  இதையடுத்து சுதிர், மும்பை கிரிக்கெட் சங்கத்திடம் புகார் அளித்துள்ளார். இத்தகவலை மும்பை கிரிக்கெட் சங்கமும் உறுதி செய்துள்ளது. இந்திய அணியின் இரண்டு நிர்வாகிகள் சுதிரிடம் தகராறு செய்துள்ளதாகப் புகார் வந்துள்ளது. அந்தப் புகாரை பிசிசிஐக்கு அனுப்புவதா இல்லையா என அடுத்தக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது.  இந்த விவகாரம் தொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாக்கூர் கூறும்போது, முதலில் என்ன நடந்தது என்கிற விவரங்களைப் பார்க்கவேண்டும். நேரடியாக நடவடிக்கையில் இறங்கமுடியாது. வீரர்களோ அல்லது நிர்வாகிகளோ, ஆஸ்திரேலியாவில் நடந்தது போல (கோலி விவகாரம்) எல்லோருக்கும் ஒரே மாதிரியான விதிமுறைகள்தான் என்றார்




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad