தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா பேட்டிங் செய்தார்களா இல்லை, அராஜகம் செய்தார்களா ‘என்னா ‘அடி’...கொஞ்சம் கூட இரக்கம் இல்லை
மும்பை: ‘என்னா ‘அடி’...கொஞ்சம் கூட இரக்கம் இல்லையா...பேட்டிங் பண்றாங்களா இல்லை, அராஜகம் பண்றாங்களா இந்த தென் ஆப்ரிக்க வீரர்கள்,’ என்று நம்மவர்கள் புலம்பும் அளவுக்கு வெளுத்துக் கட்டினர் குயின்டன், டிவிலியர்ஸ், டுபிளசி. இவர்கள் மூவரும் சதம் விளாச, நமது பவுலர்களை பார்க்கவே பாவமாக இருந்தது. பேட்டிங்கும் எடுபடாமல் போக, மும்பையில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 214 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. தென் ஆப்ரிக்க அணி ஒருநாள் தொடரை 3–2 எனக் கைப்பற்றியது. இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதல் நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2–2 என சமநிலை வகித்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மும்பை, வான்கடே மைதானத்தில் நேற்று நடந்தது. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டிவிலியர்ஸ், ‘பேட்டிங்’ தேர்வு செய்தார். குயின்டன் அபாரம்: தென் ஆப்ரிக்க அணிக்கு ஆம்லா (23) சுமாரான துவக்கம் தந்தார். பின் இணைந்த குயின்டன் டி காக், டுபிளசி ஜோடி இந்திய பந்துவீச்சை துவம்சம் செய்தது. மோகித் சர்மா வீசிய 23வது ஓவரில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த குயின்டன் டி காக் 78வது பந்தில் சதத்தை பதிவு செய்தார். இது, ஒருநாள் அரங்கில் இவரது 8வது சதம். இரண்டாவது விக்கெட்டுக்கு 154 ரன்கள் சேர்த்த போது ரெய்னா ‘சுழலில்’ குயின்டன் டி காக் (109 ரன், 87 பந்து, ஒரு சிக்சர், 17 பவுண்டரி) அவுட்டானார். டுபிளசி அசத்தல்: அடுத்து வந்த கேப்டன் டிவிலியர்சுடன் இணைந்த டுபிளசி, சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அசத்தலாக விளையாடிய டுபிளசி, ஒருநாள் அரங்கில் 5வது முறையாக சதம் கடந்தார். வலது காலில் ஏற்பட்ட காயத்தை பொருட்படுத்தாத இவர், அக்சர் படேல் வீசிய 43வது ஓவரில் 3 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். இந்நிலையில் 115 பந்தில் 133 ரன்கள் (6 சிக்சர், 9 பவுண்டரி) எடுத்த டுபிளசி ‘ரிட்டையர்டு ஹர்ட்’ முறையில் ‘பெவிலியன்’ திரும்பினார். தோனி மோசம்: மறுமுனையில் அதிரடி காட்டிய டிவிலியர்ஸ், புவனேஷ்வர் குமார் (4), மோகித் சர்மா (3), அமித் மிஸ்ரா (3) வீசிய பந்துகளை சிக்சருக்கு அனுப்பினார். இவரை கட்டுப்படுத்த சரியான வியூகம் அமைக்க தவறினார் தோனி. 57வது பந்தில் சதம் எட்டிய டிவிலியர்ஸ், 119 ரன்களுக்கு(11 சிக்சர், 3 பவுண்டரி) அவுட்டானார். புவனேஷ்வர் வீசிய 49வது ஓவரில் டேவிட் மில்லர் ‘ஹாட்ரிக்’ பவுண்டரி அடித்தார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 438 ரன்கள் குவித்தது. மில்லர் (22), டீன் எல்கர் (5) அவுட்டாகாமல் இருந்தனர். ரகானே அரைசதம்: கடின இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ரோகித் சர்மா (16) ஏமாற்றினார். ரபாடா ‘வேகத்தில்’ விராத் கோஹ்லி (7) வெளியேறினார்.பின் இணைந்த ஷிகர் தவான், ரகானே ஜோடி போராடியது. மூன்றாவது விக்கெட்டுக்கு 112 ரன்கள் சேர்த்த போது ரபாடா பந்தில் தவான் (60) அவுட்டானார்.ரெய்னா (12) நிலைக்கவில்லை. பொறுப்பாக ஆடிய ரகானே 58 பந்தில் 87 ரன்களுக்கு அவுட்டானார். ஸ்டைன் ‘வேகத்தில்’ அக்சர் படேல் (5), ஹர்பஜன் சிங் (0) நடையைகட்டினர். இம்ரான் தாகிர் ‘சுழலில்’ புவனேஷ்வர் (1) வெளியேறினார். கேப்டனாக மட்டுமல்லாமல் பேட்டிங்கிலும் ஏமாற்றினார் தோனி(27). இந்திய அணி 36 ஓவரில் 224 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வி அடைந்தது. ஏற்கனவே தோனி தலைமையிலான இந்திய அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ‘டுவென்டி–20’ தொடரை இழந்தது. தற்போது ஒருநாள் தொடரையும் 2–3 என கோட்டைவிட்டது. ஆட்டநாயகனாக குயின்டன், தொடர் நாயகனாக டிவிலியர்ஸ் தேர்வு செய்யப்பட்டனர்