பெரிய திரையரங்குகளில் ‘நானும் ரெளடி தான்’ படத்துக்கு முன்னுரிமை! பின்னடைவைச் சந்திக்கும் ‘பத்து எண்றதுக்குள்ள’!
தமிழ்நாட்டில் உள்ள மல்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் திரையிடப்பட்ட பத்து எண்றதுக்குள்ள படம் இப்போது சிறிய திரையரங்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக நானும் ரெளடி தான் படத்துக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. விக்ரம், சமந்தா நடிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் - பத்து எண்றதுக்குள்ள. இந்தப் படமும் விஜய் சேதுபதி, நயன்தாரா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கிய நானும் ரெளடி தான் படமும் ஒரே நாளில் வெளியாகின. முதல் நாளன்று பத்து எண்றதுக்குள்ள படம் ரூ. 6.50 கோடி வசூலித்தது. நானும் ரெளடி தான் ரூ. 2.16 கோடி வசூலித்தது. ஆனால், நாளடைவில் நானும் ரெளடி தான் படத்தின் வசூல் அதிகரித்தது. இந்த இரண்டு படங்களில் நானும் ரெளடி தான் அதிக பாராட்டுகளைப் பெற்றது. திரையரங்குகளில் கூட்டம் குவிய ஆரம்பித்தது. நானும் ரெளடிதான் அளவுக்குப் பாராட்டுகளைப் பெறவில்லையென்றாலும் பத்து எண்றதுக்குள்ள படம் வசூலில் ஓரளவுக்குத் தாக்குப் பிடித்துள்ளது. முதல் 5 நாளில் இந்தப் படம் சுமார் ரூ. 15 கோடி வசூலித்துள்ளது. அதேசமயம் நானும் ரெளடிதான் தொடர்ந்து வசூலில் தூள் கிளப்பி வருகிறது. இதனால் ஒரு மாற்றம் நிகழ்ந்துள்ளது.தமிழ்நாட்டில் உள்ள மல்ட்டிபிளெக்ஸ் திரையரங்குகளில் நானும் ரெளடி தான் படத்துக்கு முதலில் சிறிய திரையரங்குகள்தான் ஒதுக்கப்பட்டன. பெரிய திரையரங்குகள் அனைத்தும் பத்து எண்றதுக்குள்ள படத்துக்கு வழங்கப்பட்டிருந்தன. ஆனால், ஒரே வாரத்துக்குள் நிலைமை மாறிவிட்டது. சென்னை உள்ளிட்ட தமிழ்நாடு முழுக்க உள்ள பெரிய திரையரங்குகளில் நானும் ரெளடி தான் படத்துக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சிறிய திரையரங்குகளுக்கு பத்து எண்றதுக்குள்ள படம் மாற்றப்படுகிறது. முன்பெல்லாம் பெரிய திரையரங்குகளில் ஒருவாரமாவது படம் ஓடும் என்றிருந்த நிலை இப்போது மாறியுள்ளது. வசூலில் எது பெரிதோ அதற்கே முக்கியத்துவம் அளிக்கவே திரையரங்குகள் விரும்புகின்றன. இதனால் தீபாவளி வரை (நவம்பர் 10) பெரிய திரையரங்குகளில் நானும் ரெளடி தான் படமே ஓடும் என்று அறியப்படுகிறது