பத்து எண்றதுக்குள்ள படம் விமர்சனம்
வடஇந்தியாவில் இன்னும் சாதிவெறி மாறாத ஒரு கிராமம் என்று படம் தொடங்குகிறது. அங்கு ஒரு கிராமத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட மக்கள் தமக்கென்று ஒரு பள்ளிக்கூடம் வேண்டுமென்று கேட்டதற்காக அக்கிராமத்திலுள்ள நாற்பதுபேரை வெட்டிச்சாய்க்கிறது ஆதிக்கசாதிக்கூட்டம். இப்படித் தொடங்கிவிட்டு அப்படியே சென்னைக்கு வந்துவிடுகிறார்கள்.
சென்னையில் ஒரு ஓட்டுநர் பயிற்சிப்பள்ளியில் பயிற்றுநராக இருந்துகொண்டு சின்னச்சின்ன கடத்தல்வேலைகளைச் செய்துகொண்டிருக்கும் விக்ரம், அனாதை விடுதியில் பிறந்து வளர்ந்து சரியான வேலை இல்லாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தாலும் ஏகப்பட்ட குறும்புகளைச் செய்துகொண்டிருக்கும் சமந்தா.கடத்தல் வேலைகளைச் செய்யும் பசுபதி மற்றும் அவருடைய ஆட்கள் ஆகியோருக்கும் வடஇந்தியாவில் நடந்த அந்தக் கொடுமையான நிகழ்வுக்கும் ஒரு சம்பந்தத்தை உருவாக்கி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் விஜய்மில்டன். எவ்வளவு பெரியகாரியமாக இருந்தாலும் பத்துஎண்றதுக்குள்ள முடித்துவிடுகிற திறமை உடையவர் விக்ரம் என்பதால் படத்துக்கு இந்தப்பெயர். படத்தில் அவருக்குப் பெயரே கிடையாது. ஜேம்ஸ்பாண்ட், மணிரத்னம், முருகதாஸ், மைக்கேல்ஜாக்சன் என்று நேரத்துக்கு ஒரு பெயரைச் சொல்கிறார் விக்ரம். பேரே இல்லாததை வைத்தே பல காட்சிகளை வைத்திருக்கிறார்கள். சுவாரசியமாக இருக்கிறது. முறுக்கேறிய உடலும் அலட்சியஉடல்மொழியுமாய் சண்டைக்காட்சிகளில் கவர்கிறார் விக்ரம். காதல்காட்சிகள் குறைவாக இருக்கின்றன.
எதிரில் இருப்பவர்களைப் புகைப்படம் எடுப்பதாகச் சொல்லிவிட்டு தன்னையே படமெடுத்துக்கொள்ளும் குறும்புக்காரி சமந்தா. அவர் பெயர் ஷகிலா. அம்மாபெயர் பரங்கிமலை ஜோதி என்று ஏகத்துக்கும் கிண்டலடித்திருக்கிறார்கள். குறும்புத்தனமான வேடத்துக்கேற்ப எந்நேரமும் புன்னகைதவழும் முகத்துடன் நடித்திருக்கிறார் சமந்தா. எதிர்பாராத விதமாக இன்னொரு தோற்றத்தில் வருகிற சமந்தா, காட்டுகிற கடுமை முற்றிலும் வேறாக இருக்கிறது. தோற்றம் நன்றாக இருக்கிறதா என்று கேட்காதீர்கள். பசுபதி, பூரன்சிங், அபிமன்யூ என்று படத்தில் பல வில்லன்கள் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களுடைய வில்லத்தனம் பெரிதாக எடுபடவில்லை. பசுபதி வில்லனா நகைச்சுவையாளனா என்கிற குழப்பம் வந்துவிடுகிறது. சார்மி ஒரு பாடலுக்கு மட்டும் வந்து கவர்ச்சிவிருந்து படைத்துவிட்டுப் போகிறார். இமானின் இசையில் பேரைக்கேட்டா பேஜாரு பண்றே, கானா கானா தெலுங்கானா உள்ளிட்ட பாடல்கள் தாளம் போடவைக்கின்றன. சண்டைக்காட்சிகளுக்குப் பின்னணிஇசை பலமாக அமைந்திருக்கின்றன.வடஇந்தியாவில் கதை தொடங்குவது மட்டுமின்றி விக்ரம் கார் பயணமாகவே வடஇந்தியா நோக்கிப் போவதால் பலவிதமான இடங்களில் படப்பிடிப்பு நடத்தியிருக்கிறார்கள். பாஸ்கரனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பார்க்கவைக்கின்றன.
வடஇந்தியாவின் கொடுமையான சாதியச்சிக்கலைக் கதைக்குப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் இயக்குநர் விஜய்மில்டன், திரைக்கதையில் கூடுதல்கவனம் காட்டியிருக்கலாம். காருக்குள் கதாநாயகியை வைத்துவிட்டு அது தெரியாமல் விக்ரம் போகிறார் என்று சொல்வது பலவீனமாக இருக்கிறது.
கதாநாயகனின் தங்கைப்பாசம், கதாநாயகி அனாதை என்கிற அனுதாபம், முட்டாள்வில்லன் என்கிற பார்த்துச்சலித்த பாத்திரங்கள் அலுப்பூட்டுகின்றன. “போயிட்டு முடிக்கிற விசயமில்ல முடிச்சிட்டுப் போற விசயம், பேயைப் பார்த்து பேய் பயப்படாது” என்று ரசிக்கும் வசனங்களோடு, “பத்துஎண்றதுக்குள்ள எல்லாத்தையும் முடிச்சுடுவியா, நானே காட்டுவேனே எதுக்கு அவசரம்” போன்ற இரட்டைஅர்த்த வசனங்களும் கலந்திருக்கின்றன. சமந்தாவின் சட்டைப்பையில் கார்சாவியை விக்ரம் எடுக்கிற நேரத்தில் ஒலிக்கிற பின்னணிஇசை கொஞ்சம் அதிகம்.