தோனி தான் பலிகடா: தோனிக்கு ஆதரவாக பேசும் கவாஸ்கர்
இந்திய அணித்தலைவர் தோனிக்கு முன்னாள் இந்திய ஜாம்பவான் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோற்றதால் அணித்தலைவர் தோனி மீது விமர்னங்கள் எழுந்தன. இந்திய அணியில் டோனியின் இடம் பற்றியும், அவரது தலைவர் பதவி பற்றியும் பரிசீலிக்க வேண்டும் என்றும் பலரும் குற்றம் சாட்டினர். இந்நிலையில் தோனி இந்திய அணியில் இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகள் வரை விளையாடுவார் என்று கவாஸ்கர் கூறியுள்ளார். இது பற்றி அவர் கூறுகையில், "தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தவான், ரெய்னா, கோஹ்லி, பின்னியின் பேட்டிங் பற்றி யாரும் கேள்வி எழுப்பவில்லை. அதே சமயம் பந்துவீச்சாளர்களின் மோசமான செயல்பாடு பற்றியும் அனைவரும் மறந்து விட்டனர். ஆனால் தோனியை மட்டும் குறை கூறுகின்றனர். அவர் தான் இதற்கு பலிகடா. அவர் இந்திய அணிக்காக இன்னும் 3 அல்லது 5 ஆண்டுகள் வரை ஆடுவார். நான் 37வது வயதில் தான் ஓய்வு பெற்றேன். சச்சின் தனது 40வது வயதில் தான் ஓய்வு பெற்றார். இதே போல் தோனிக்கும் இன்னும் அதிக போட்டிகள் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.