புகாரை ‘வாபஸ்’ பெறமாட்டேன்! தோழியால் மிஸ்ராவுக்கு மீண்டும் நெருக்கடி
மிஸ்ரா மீதான புகாரை திரும்ப பெற முடியாது என்று அவரது தோழி கூறியுள்ளதால் அவருக்கு மீண்டும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான மிஸ்ரா, பெங்களூரில் தனியார் ஹொட்டலில் தங்கியிருந்த போது அவரை பார்க்க வந்த தோழி வந்தனாவை தாக்கியுள்ளார். பின்னர் அவரது தோழி இது தொடர்பாக போலீசில் புகார் அளித்தார். மேலும், மிஸ்ராவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதற்கிடையில் இருவருக்கும் சமரசம் ஏற்பட வந்தனா, மிஸ்ரா மீதான புகாரை வாபஸ் பெற தயாராக இருப்பதாக தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அவர் மீதான புகாரை திரும்ப பெற முடியாது என்று பல்டி அடித்துள்ளார். இதனால் மிஸ்ராவுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக பேசிய அவரது தோழி வந்தனா, "போலீசில் புகார் அளித்தவுடன் மிஸ்ரா என்னிடம் பேசினார். பெங்களூர் வந்து பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். ஆனால் தற்போது அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர் போலிசார் முன்னிலையில் என்னிடம் பேச வேண்டும். நான் உடல் மற்றும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளேன். தற்போது மிஸ்ரா மீது அளித்த புகாரை வாபஸ் பெறமாட்டேன்" என்று தெரிவித்துள்ளார். தென் ஆப்பிரிக்கா தொடரில் மிஸ்ரா விளையாடி வரும் நிலையில், அவர் மீதான இந்த புகார் அவருக்கு நெருக்கடியை அதிகரித்துள்ளது.