கமல், அஜித்துக்காக முடிவை மாற்றிக் கொண்டதா தயாரிப்பாளர்கள் சங்கம்?
விஷால் நடித்த பாயும்புலி படம் வெளியாகும் நேரத்தில் தயாரிப்பாளர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, செப்டம்பர் 4 ஆம் தேதி முதல் புதிய படங்களைத் திரையிடமாட்டோம் என்று தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்தது. அப்போதே அருண்பாண்டியன் உள்ளிட்ட சில தயாரிப்பாளர்கள் அம்முடிவைக் கடுமையாக எதிர்த்ததோடு அதைக் கடைபிடிக்க முடியாதென வெளிப்படையாக அறிவித்தனர். அதனால், அடுத்த நாளே தன் முடிவை மாற்றிக்கொண்டது தயாரிப்பாளர்கள் சங்கம். இப்போது படங்கள் திரையிடப்படும் என்றும் வருகிற அக்டோபர் 23ம் தேதியிலிருந்து புதியபடங்கள் ரிலீஸ் கிடையாது என முடிவெடுத்தனர். அப்போதே இதெல்லாம் நடைமுறை சாத்தியமில்லை என்று சொல்லப்பட்டது. அதை மெய்ப்பிக்கும் விதமாக, நேற்று (வெள்ளிக்கிழமை) தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக்கூட்டம் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
அந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, தமிழ்நாடு திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 23.10.2015 முதல் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவை திரும்ப பெறக்கோரி கேட்டுக்கொண்டதற்கிணங்கவும், நமது தயாரிப்பாளர்கள் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் 23.10.2015 முதல் எந்தமொழித் திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்ற முடிவை ஒத்திவைப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.
திரையுலகின் அனைத்து பிரிவினரையும் கலந்து பேசி மறு தேதி அறிவிக்கப்படும். நமது சங்க உறுப்பினர்கள் இந்த முடிவுக்கு தங்களது மேலான ஒத்துழைப்பை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. தீபாவளியன்று கமல், அஜித் ஆகியோரின் படங்கள் வெளியாகவுள்ளன. எனவே தன் முடிவில் இருந்து தயாரிப்பாளர் சங்கம் இரண்டாவது முறையாகப் பின்வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.