லட்சுமிராமகிருஷ்ணன் சொல்கிறார் நானும் என் குடும்பமும் விரும்பத்தகாத சூழலைச் சந்திக்கிறோம்







ஆரோகணம், அம்மணி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநரும் நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.  சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சியில் என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்ற சொல்லை உபயோகப்படுத்தியதன் எதிரொலியாக பல டிவி நிகழ்ச்சிகள், படங்கள், பாடல்கள் ஆகியவற்றில் இச்சொல்லை பயன்படுத்தி வருகின்றனர்.இதனால் மனமுடைந்த லட்சுமி ராமகிருஷ்ணன் தனியார் தொலைக்காட்சிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். நோட்டீஸ் தொடர்பாக விளக்க அறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில், “ நான் உபயோகப்படுத்திய வசனம் பல்வேறு திரைப்படங்களிலும், வேறு வேறு நிகழ்ச்சிகளிலும் பயன்படுத்தப்பட்டு வந்தது. இது மட்டுமல்லாமல் மிக உச்சமாக 'ரஜினிமுருகன்' திரைப்படத்தில், இதே வசனத்தை பல்லவியாக வைத்து பாடலும் உருவாகியிருக்கிறது.  இது போன்ற காரணங்களால் நானும் என் குடும்பத்தினரும் பொது இடங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு பின் விளைவுகளையும்,விரும்பத்தகாத சூழலையும் சந்திக்க நேர்ந்தது.  இப்படிபட்ட தொடர் பிரச்சினைகளால் இந்த வசனம் எந்தச் சூழலில் சொல்லப்பட்டது? எதற்காகச் சொல்லப்பட்டது?என்பதை மிக வலியோடு ஒரு வீடியோ பதிவின் மூலம் சமூக வலைதளத்தில் வெளியிட்டேன்.அதன் பிறகு சிறிது சிறிதாக இந்த பிரச்சினைகள் குறையத் தொடங்கின.  இப்படிப்பட்ட சூழலில் இப்பிரச்சினையை மீண்டும் தூண்டும் வகையில் “என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா-பகுதி2” என்ற ஒரு விளம்பர ப்ரோமோவை விஜய் டிவி வெளியிட்டது. எனக்கு விரும்பத்தகாத வகையிலும் மீண்டும் அத்துமீறுவதாகவும் இருக்கிறது. மீண்டும் இந்த பிரச்சினையை ஆரம்பத்தில் இருந்து என்னால் சந்திக்கவோ விளக்கவோ என்னுடைய பரபரப்பான வேலைகளும், உடல்நிலையும் இடம் கொடுக்கவில்லை.  இது தொடர்பாக மின்னஞ்சல் மூலம் எனது எதிர்ப்பைப் பதிவு செய்து இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேண்டாம் என்று தெரிவித்து இருந்தேன். ஆனால் அதற்கு எந்தப் பதிலும் வரவில்லை. இதன் காரணமாக நான் கமிஷனரை அணுகி புகார் அளித்தேன். இது குற்றவியல் வழக்கு சார்ந்தது அல்ல என்பதால் அவர்கள் என்னை நீதிமன்றம் மூலம் சட்டபூர்வமாக இதை அணுகுமாறு கூறினார்கள்.  இதனை தொடர்ந்து எனது வழக்கறிஞர் மூலமாக அறிக்கை அனுப்பி உள்ளேன். அதற்கும் பதில் வரவில்லை என்றால் அத்தொலைக்காட்சி மீது மானநஷ்ட வழக்கு தொடர வேண்டிய சூழல் ஏற்படும்.  இதனிடையே, வார இதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், நான் பெரிதாக எடுத்துக் கொள்ளாததால் நாங்கள் மறுபடியும் செய்தோம் என்று அவர்கள் தரப்பினை நியாயப்படுத்தி இருக்கிறார்கள். ஒரு முறை அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதற்காக மறுபடியும் மறுபடியும் செய்து எல்லை மீறுவது எந்த விதத்தில் நியாயம்?  இன்னொரு பதிலும் அளித்து இருக்கிறார்கள். நிகழ்ச்சியை ஒளிபரப்பும் முன்பாக நாங்கள் 'இந்த நிகழ்ச்சி யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் ஒளிபரப்பப்படவில்லை’ என்று குறிப்பு போடுகிறாமே என்றார்கள். அப்படி பார்த்தால் குறிப்பை போட்டு விட்டு யாரை வேண்டுமாலும்,எப்படி வேண்டுமானாலும் கிண்டல் செய்யலாம் என்று சொல்கிறார்களா?  ஒரு தனி நபராக இருந்து கொண்டு தொலைக்காட்சி நிறுவனத்துடன், அதிலும் செல்வாக்கு மிகுந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துடன் போராடுவது கடினம்தான். ஆனால் அதைப் பற்றியோ அல்லது இறுதி முடிவுகளைப் பற்றி நான் கவலைப்படவில்லை. என்னுடைய சுய கௌரவத்தை பாதுகாத்துக் கொள்ள நான் போராடுவேன்" என்று அந்த அறிக்கையில் தெரிவித்திருக்கிறார் லட்சுமி ராமகிருஷ்ணன்.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad