ருத்ரமாதேவி படம் விமர்சனம்






காக்கத்திய அரசருக்கு பெண்குழந்தை பிறந்தால் உடனே அந்நாட்டின் மீது படையெடுப்பது என்று அண்டைநாட்டுஅரசரும், பெண்குழந்தை பிறந்தால், காக்கத்தியஅரசரைக் கொன்றுவிட்டு ஆட்சியைப் பிடிக்க அவருடைய சகோதரர்களும் திட்டமிடுகின்றனர்.இதையறிந்த அரசரும் மந்திரியும் சேர்ந்துகொண்டு பிறந்தபெண்குழந்தையை ஆண் என்றே சொல்லி வளர்க்கிறார்கள். யார் கண்ணிலும் படாமல் ஒரு காட்டுக்குள் வைத்து அவரை வளர்த்துவருகிறார்கள். பதினான்குவயதில் நாட்டுக்கு வருகிறார். அதன்பினனர்தான் அவருக்கே அவர் பெண் என்று தெரிகிறது.  நாட்டைக்காப்பதற்காகத்தான் தன் தந்தை பொய்சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து அவரும் ஆண்வேடத்திலேயே இருக்கிறார். ஊர்மக்களுக்கு உண்மை தெரிந்தபின்பு என்ன நடக்கிறது என்பதை பிரமாண்டமாகச் சொல்ல முயன்றிருக்கிறார்கள்.
அனுஷ்கா, ருத்ரதேவன் மற்றும் ருத்ரமாதேவி என இரண்டுதோற்றங்களில் வருகிறார். மேக்கப் போடாத அனுஷ்கா ருத்ரதேவன் மேக்கப்போட்ட அனுஷ்கா ருத்ரமாதேவி. இரண்டு தோற்றங்களிலும் குதிரையேறுகிறார், யானையை அடக்குகிறார், வாள்சண்டைகள் போடுகிறார்.
கொள்ளைக்காரன் சண்டிவீரனாக அல்லுஅர்ஜூனும், இன்னொரு இளவரசராக ராணாடகுபதியும் நடித்திருக்கிறார்கள். இவர்களில் அல்லுஅர்ஜூன் தற்கால சென்னைத்தமிழை நினைவுபடுத்துகிற மாதிரி பேசுகிறார். அமைச்சராக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், பொறுப்புக்கேற்ற மதியூகியாக இருக்கிறார். சுமன், ஆதித்யா உட்பட நிறையப்பேர் இருக்கிறார்கள்.  நித்யாமேனன், கேத்தரின்தெரசா, ஹம்சாநந்தினி ஆகியோரும் படத்தில் இருக்கிறார்கள். இவர்களில் நித்யாமேனன், கேத்தரின்தெரசா ஆகியோருக்குப் பெரிதாக வேலை இல்லை. ஹம்சாநந்தினி மட்டும் உளவாளியாக வந்து யார்இவர்? என்று கேட்கவைக்கிறார்.பெரியஅரண்மனைகள், யானைகள், குதிரைகள், மண்டபங்கள் என்று ஏகத்துக்கும் மெனக்கெட்டவர்கள், திரைக்கதையில் மிகவும் பலவீனமாக இருக்கிறார்கள். காட்சிகளைப் பார்க்கும்போது மேடைநாடகங்கள் நினைவுக்கு வருவதைத் தவிர்க்கமுடியவில்லை.  நிறையஅரசிகள் வாழ்ந்திருக்கும் நாட்டில் ஓர் அரசருக்குப் பெண்குழந்தை பிறந்துவிட்டாலே அவர் பலவீனமாகிவிடுவார் என்று கதையை வைத்துக்கொண்டதே முதல்பலவீனம். இருபத்தைந்து ஆண்டுகள் அதை ரகசியமாக வைத்திருக்கிறார்கள் என்பதும் நம்பத்தகுந்தவகையில் இல்லை.  நித்யாமேனனோடு அனுஷ்காவுக்குக் கல்யாணம் வேறு செய்துவைக்கிறார்கள். அதன்பின் நடக்கும் காட்சிகள் பொருத்தமற்று இருக்கின்றன. அதேபோல், ருத்ரதேவனின் ஆட்சியில் நல்லமுறையில் வாழ்ந்துகொண்டிருந்த மக்களே, அவர் பெண் என்று தெரிந்ததும் கோட்டையைவிட்டு வெளியேற்றுகிறார்கள் என்பதும் பொருத்தமாக இல்லை.
கடைசியில் நடக்கிற போர்க்களக்காட்சிகளில் பாம்புபோலவும் பருந்துபோலவும் வியூகங்கள் வகுக்கப்படுவதும் அதைப்படமாக்கியதும் ஏற்கெனவே பார்த்த விசயங்கள்தாம் என்றாலும் நன்றாக இருக்கிறது.  தமிழில் வசனங்களையும் பாடல்களையும் பா.விஜய் எழுதியிருக்கிறார், எல்லோரும் ஒரு மாதிரி பேசிக்கொண்டிருக்க அல்லுஅர்ஜூன் மட்டும் வேறுமாதிரிப் பேசுவது எதனால் என்று புரியவில்லை. பாடல்கள் சுமார் ரகம்.
தோட்டாதரணியின் கலையமைப்புகள், அஜயன்வின்சென்டின் ஒளிப்பதிவு, இளையராஜாவின் இசை, பீட்டர்ஹெயினின் சண்டைப்பயிற்சி ஆகியன இருந்தும் படத்துக்குப் பலம் சேர்க்கவில்லை.

கதை,திரைக்கதை,வசனம் எழுதி இயக்கியிருக்கும் குணசேகருக்கு இந்தப்படம் நற்பெயரைக் கொடுக்காது.




Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad