"தமிழ்நாடா...'டப்பிங்' நாடா?"- தனது படத்துக்கு தியேட்டர் கிடைக்காமல் தவிக்கும் மன்சூர் கொந்தளிப்பு!
தமிழகத்தில் 880 தியேட்டர்களில் டப்பிங் படங்கள் புக்காகி விட்டது. என்னுடைய நேரடி படங்களுக்கு தியேட்டர் இல்லை என்கிறார்கள். இது தமிழ்நாடா, டப்பிங் நாடா?" என்று நடிகர் மன்சூர் அலிகான் காட்டமாக கேள்வி எழுப்பி உள்ளார். 'அதிரடி' என்ற திரைப்படத்தை தயாரித்துள்ள நடிகர் மன்சூர் அலிகான், தனது படத்திற்கு தியேட்டர்கள் கிடைக்காததால் தயாரிப்பாளர் சங்க அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாட்டில் நேரடி தமிழ் படங்களுக்கு திரையரங்குகளே இல்லை. அந்த நிலைமைக்கு ஆயிடுச்சு. இந்த பக்கம் பார்த்தால் ருத்ரமாதேவி, கோப்பெரும் தேவி, புருஸ்லி இப்படி 880 தியேட்டர் புக்காகி விட்டது. என்னுடைய நேரடி படங்களுக்கு தியேட்டர் இல்லை என்கிறார்கள். இது தமிழ்நாடா, டப்பிங் நாடா, தமிழ் புரொடியூசர் கவுன்சிலா இல்ல, தமிழ் டப்பிங் புரொடியூசர் கவுன்சிலா. இதான் என்னுடைய கேள்வி. ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் உள்ளது போல், அந்தந்த மாநில திரைப்படங்களுக்கு 75 சதவீதமும், பிறமொழி திரைப்படங்களுக்கு 25 சதவீதமும் முன்னுரிமை தர வேண்டும். விரைவில் இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். கண்டே ஆகணும், இல்லையென்றால் இந்த படத்தை முடித்து விட்டு என்ன பண்ணணுமோ அதை பண்ணுவேன் . அதை இப்போது செல்ல விரும்பவில்லை" என்றார் ஆவேசத்துடன்