புலி பட சிறப்பு காட்சிகளை ரத்து செய்ததால் விஜய் ரசிகர்கள் சாலை மறியல்
புலி திரைப்பட சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் நடிகர் விஜய் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். சில இடங்களில் ரசிகர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. நடிகர் விஜய் நடித்த ‘புலி’ திரைப் படம் சுமார் ரூ.100 கோடி செலவில் பிரமாண்டமான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளது. சிம்புதேவன் இயக்கியுள்ள இப்படத்தில் ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா மொத்வானி, பிரபு, சுதீப் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள இப்படத்தை எஸ்.கே.டி.ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த திரைப்படம் இன்று (வியாழக்கிழமை) வெளியாக உள்ளது. இந்நிலையில், நடிகர் விஜய், நடிகைகள் நயந்தாரா, சமந்தா மற்றும் ‘புலி’ திரைப்பட குழுவினர் வீடுகளில் வருமான வரித்துறையினர் நேற்று ஒரே நேரத்தில் அதிரடி சோதனை நடத்தினர். இது, திரை உலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இன்று காலை 9 மணிக்கு முந்தைய புலி படத்தின் சிறப்புக் காட்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காலை 9 மணிக்குப் பிறகு திரைப்படம் வெளியாகும் என தயாரிப்பாளர் அறிவித்துள்ளார். சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால், அந்த படத்தை காண புக்கிங் செய்திருந்தவர்களுக்கு சென்னையில் பணம் திரும்பத்தரப்பட்டது. மேலும், புலி படம் திரையிடாததால் கிருஷ்ணகிரியில் ரசிகர்கள் திரையரங்கம் முன் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. வருமான வரித்துறையினர் நேற்று முதல் புலி திரைப்பட குழுவினர் வீடுகளில் சோதனை நடத்தி வருவதால், ரொக்கம் மற்றும் வங்கிகளில் உள்ள பணங்கள் முடக்கப்பட்டுள்ளதால், கியூப் உள்ளிட்ட நிருவனங்களுக்கு கட்டணம் செலுத்தாததால் சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இன்று காலை 4 மணிக்கு, காலை 7 மணிக்கும் திரையிடப்பட்ட இருந்த சிறப்புக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், இந்த திரைப்படத்தை இன்று திரையிடுவதற்கான ஏற்பாடுகளை புலி படத்தினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.