ஐபிஎல் தொடரில் 8 ஆண்டுகள் ஆதிக்கம்: சென்னை அணியை விட்டு வெளியேறுகிறார் தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் தோனி 2 ஆண்டுகள் மட்டும் புதிய ஐபிஎல் அணியில் விளையாட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐபிஎல் சூதாட்ட வழக்கில் முன்னணி அணிகளான சென்னை, ராஜஸ்தானுக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட லோதா கமிட்டியில் இந்த தீர்ப்பை கிரிக்கெட் வாரியம் ஏற்றுக் கொண்டது. இதனால் 2016, 2017ம் ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் இந்த இரு அணிகளும் விளையாட முடியாது. இந்த 2 அணிகளுக்கும் பதிலாக இரண்டு ஆண்டுக்கு புதிய அணிகள் ஏலத்தில் எடுக்கப்படுகிறது. சென்னை அணிக்கு 2 ஆண்டு தடை விதிக்கப்பட்டதால் தோனி ஐபிஎல் போட்டியில் விளையாடாமல் ஒதுங்கி இருக்கலாம் என்ற நிலையில் இருந்தார். தற்போது புதிய ஐபிஎல் அணியில் விளையாடதோனி முடிவு எடுத்துள்ளதாக நம்ப தகுந்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டி 2008ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 8 ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுள்ளன. இதில் சென்னை அணியின் தலைவராக 8 ஆண்டுகளாக டோனியே இருந்து வந்தார். இந்நிலையில் அவர் புதிதாக உருவாக்கப்பட உள்ள அணியில் 2 ஆண்டுகள் மட்டும் விளையாட உள்ளார். அதன் பிறகு அவர் மீண்டும் சென்னை அணிக்கே திரும்பி விடுவார் என்று கூறப்படுகிறது. தடைவிதிக்கப்பட்ட சென்னை, ராஜஸ்தான் அணிகளில் இருந்து முன்னணி வீரர்கள் 6 பேர் புதிய ஐபிஎல் அணிகளில் நேரடியாக இடம்பெற உள்ளனர். மற்ற வீரர்கள் ஏலப்பட்டியலில் இடம் பெறுவார்கள்.