சென்னையில் 4வது ஒருநாள் போட்டி: அனுபவ ஆட்டத்தால் அசத்துவாரா ரெய்னா?
தென் ஆப்பிரிக்கா தொடரில் தடுமாறி வரும் ரெய்னாவுக்கு சென்னை சேப்பாக்கம் மைதான அனுபவம் கைகொடுக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர். இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தோனி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகளில் ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது. இதனால் 2-1 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலையில் இருக்கிறது. மேலும், இந்திய அணியின் துடுப்பாட்ட வரிசை மோசமாக உள்ளது. இதில் அதிரடி வீரரான ரெய்னா பார்ம் இல்லாமல் தவித்து வருவதும் இந்திய அணிக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. ரெய்னா, கடந்த உலகக்கோப்பைத் (2015) தொடரில், வங்கதேச அணிக்கு எதிரான காலிறுதியில் அரை சதம் அடித்தார். அப்போது 5வது இடத்தில் களமிறங்கினார். அதன் பின் நடந்த போட்டிகளில் சோபிக்கவில்லை. இதற்கு சமீப காலமாக பேட்டிங் வரிசையில் அடிக்கடி மாற்றம் செய்யப்படுவதும் வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்படுவதும் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. முதல் 3 ஒருநாள் போட்டிகளில் 3,0,0 என ரெய்னாவின் மோசமான பேட்டிங் அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. இந்நிலையில் 4வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 22ம் தேதி நடக்கிறது. ஐபிஎல் தொடரில் பல போட்டிகளில் ரெய்னா இங்கு விளையாடி உள்ளார். இதனால் இந்த அனுபவ ஆட்டங்கள் 4வது ஒருநாள் போட்டியில் ரெய்னாவிற்கு சாதகமாக அமையும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.