400 ஆண்டுகளாக நீரில் மூழ்கிய தேவாலயம்: மீண்டும் தெரிவதால் மக்கள் பரவசம்!
மெக்சிக்கோ நாட்டில் 400 ஆண்டுகளுக்கு முந்தைய தேவாலயம் ஒன்று ஆற்றுக்குள் இருந்து மீண்டும் வெளியே தெரிவதால் மெக்சிகோ மக்கள் பரவசத்தில் திளைத்துள்ளனர்.மெக்சிகோவின் நெசஹுவால்கோயோட்ல் நீர்த்தேக்கத்தில், வறட்சியால் 82 அடிக்கு நீர் குறைந்து போனது. அதனால் 16 ம் நூற்றாண்டின் மத்தியில், ப்ரெய்ர் பார்ட்டோலோம் டி லா கஸாஸ் என்கிற பாதிரியாரின் தலைமையில், இப்பகுதியைச் சேர்ந்த மக்களால் நிறுவப்பட்ட 183 அடி உயரமுள்ள இந்த தேவாலயம் தற்போது வெளியில் தெரிகிறது.
கடந்த 1773 மற்றும் 1776 ம் ஆண்டுகளில் இப்பகுதியில் ஏற்பட்ட பிளேக் நோயால் இந்த தேவாலயம் கைவிடப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த தேவாலயத்தின் கட்டடக்கலை, இப்பகுதிக்கு அருகிலுள்ள 1564 ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட மடாலயத்தை ஒத்ததாக இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது வெளியே வந்துள்ள இந்த தேவாலயத்தைக் காண அந்தப் பகுதிக்கு, மக்கள் கூட்டம் கூட்டமாகச் சென்று வருகின்றனர்.