பிரமிக்கவைக்கும் டைட்டானிக் நாயகி 40 வயது, 35 படங்கள், 74 விருதுகள்
ரோஸ் என்றாலே இவர் ஞாபகம் வரும் அளவுக்கு எல்லாத் தலைமுறையினரும் ரசிக்கும் டைட்டானிக் படத்தின் நாயகி கேட் வின்ஸ்லட்டின் பிறந்த நாள் இன்று. ஹாலிவுட் படங்கள் பார்க்காதவர்கள் கூட, "டைட்டானிக்" படத்தை மட்டும் ஒரு முறையாவது பார்த்திருப்பார்கள். கதைக்காகவும், கேட் வின்ஸ்லட்'டிற்காகவும். அக்டோபர் 5, 1976ல் பிறந்த இவர், தன்னுடைய திரைப் பயணத்தை 1994 ஆண்டு "ஹெவன்லி கிரீச்சர்ஸ்" என்கிற திரைப்படத்தில் தொடங்கினார். அதன் பின், 1997ல் வெளியான ஜேம்ஸ் கேமரூனின் "டைட்டானிக்" இவருக்கு உலகப் புகழ் வாங்கித் தந்தது. ரொமான்டிக் படங்களோடு தன் நடிப்பை சுருக்கிக் கொள்ளமால், சைகலாஜிகல் த்ரில்லர், பயோக்ராஃபிகல் திரைக்கதை, குணச்சித்திர பாத்திரங்கள் என அனைத்திலும் தன் தடம் பதித்தார். இவர் நடித்த "ரெவால்யூஷனரி ரோட்", "லிட்டில் சில்ட்ரன்", "எடர்னல் சன்ஷைன் ஆப்ஃ ஸ்பாட்லஸ் மைண்ட்" ஆகிய படங்களே சாட்சி. மிகக் குறைவான வயதில் ஆறு முறை "அகாடமி விருதிற்கு"ப் பரிந்துரைக்கப் பட்ட பெருமையும் இவரையே சாரும்.
பாஃப்தா விருது, எம்மி விருது, அகாடமி விருது, கோல்டன் க்ளோப் விருது, க்ராமி விருது என கிட்டத்திட்ட ஹாலிவுட்டின் அனைத்து விருதுகளையும் வாங்கியவர்.
இன்றுடன் 40 வயதைத் தொடும் இவர், இது வரை 35 திரைப்படங்களில் நடித்து 74 விருதுகளைப் பெற்றுள்ளார். வரப்போகும் நூற்றாண்டுகளில் என்றும் அழியாத காதல் காவியத்தின் நாயகியாகிய பெருமையை கேட் வின்ஸ்லட் பெற்றுள்ளார்.