சிக்கலில் சிக்கிய மெஸ்ஸி: வரி ஏய்ப்பு வழக்கில் 22 மாதங்கள் சிறைத்தண்டனை?
வரி ஏய்ப்பு வழக்கில் அர்ஜென்டினாவின் நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸிக்கு 22 மாதங்கள் சிறை தண்டனை விதிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 2000ம் ஆண்டு முதல் ஸ்பெயினில் வசித்து அர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவரும் பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரருமான லயனல் மெஸ்ஸிக்கு, கடந்த 2005ம் ஆண்டு அந்நாட்டின் குடியுரிமை வழங்கப்பட்டது. இந்நிலையில், மெஸ்ஸி தனது புகைப்படங்களை பயன்படுத்திக் கொள்ள உருகுவே, சுவிட்சர்லாந்து நாடுகளின் நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தது தொடர்பாக கிடைத்த வருவாயில் வரி ஏய்ப்பு செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனையடுத்து கடந்த 2007 முதல் 2009ம் ஆண்டு வரை சுமார் 6.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை மெஸ்ஸியும் அவரது தந்தை ஜார்ஜ் கார்சியோவும் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக கூறி ஸ்பெயின் நிதித்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு ஸ்பெயினில் உள்ள பார்சிலோனா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மெஸ்ஸி அளித்துள்ள மனுவில், தனக்கு அதை பற்றி ஒன்றும் தெரியாது என்றும், தனது வரி தொடர்பான விவகாரங்களை தந்தை ஜார்ஜ் கார்சியாதான் கவனித்து வந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தான் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டுமென்றும் தெரிவித்திருந்தார். ஆனால் அந்த மனுவை தள்ளுபடி செய்த பார்சிலோனா நீதிமன்றம் அவரை நேரில் ஆஜராகும் படி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இந்த வரி ஏய்ப்பு வழக்கில் மெஸ்ஸிக்கும், அவரது தந்தை ஜார்ஜ் கார்சியோவுக்கும் 22 மாதங்கள் சிறைத் தண்டனையும், தலா 2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அபராதமும் விதிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இந்த வரி ஏய்ப்பு விவகாரம் மெஸ்ஸியின் கால்பந்து வாழ்க்கைக்கே இடையூறாக அமையும் என கருதப்படுகிறது.