விராட் கோஹ்லி சொல்கிறார் சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்தது வருத்தமளிக்கிறது
சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரை இழந்தது வருத்தமளிக்கிறது என்று இந்திய துணைத்தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதில் தரம்சாலாவில் நடந்த முதலாவது ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற இந்திய அணி, கட்டாக்கில் நடந்த 2வது ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்து டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் பறிகொடுத்தது. கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நடைபெறவிருந்த 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் மழையால் ரத்து செய்யப்பட்டது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இழந்தது வரும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் சிறப்பாக செயல்பட எங்களுக்கு கிடைத்த ஒரு பாடம் என்று கோஹ்லி தெரிவித்துள்ளார். மேலும், சொந்த மண்ணில் டி20 தொடரை இழந்துள்ளதால் இந்த தோல்வி வருத்தமளிக்கிறது. இருப்பினும் நான் நல்ல பார்மில் இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இலங்கை தொடரில் இருந்து நான் நல்ல நிலையில் இருப்பதை உணர்கிறேன். பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் உடன் தொடர்ந்து ஆலோசனையும் கேட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.