2015ம் ஆண்டில் ஒரு கோப்பை கூட வெல்லவில்லை! முடிவுக்கு வரும் தோனியின் சகாப்தம்?
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் தோனியின் சகாப்தம் முடிவுக்கு வந்து விட்டதாக முன்னாள் இந்திய வீரர் மொகிந்தர் அமர்நாத் தெரிவித்துள்ளார். தோனி தலைமையிலான இந்திய அணி கடந்த ஜனவரி மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற 3 நாடுகள் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்றது. இந்த தொடரில் ஆஸ்திரேலியா , இந்தியா, இங்கிலாந்து அணிகள் பங்கேற்றன. இதில் லீக் போட்டிகளில் ஒரு வெற்றி கூட பெறமால் இந்தியா வெளியேறியது. பின்னர் பிப்ரவரி மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை போட்டியில் மோசமான பந்துவீச்சை வைத்துக் கொண்டு எப்படியோ திக்குமுக்காடி அரையிறுதி வரை சென்றது. அடுத்து ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சுற்றுப்பயணம் சென்ற தோனி தலைமையிலான இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இழந்தது. தற்போது தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் தோனி தலைமையில் இந்திய அணி தோல்வி கண்டுள்ளது. இந்திய அணிக்கு ஒரே ஒரு ஆறுதலான விடயம் இந்த ஆண்டில் ஜிம்பாப்வே ஒருநாள் போட்டி தொடரில் கோப்பை வென்றது மட்டுமே. அதுவும் ரஹானே தலைமையில் 3 ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில் முன்னாள் இந்திய அணியின் தெரிவாளரும், 1983ம் ஆண்டு உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற வீரருமான மொகிந்தர் அமர்நாத் தோனியை விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், "தோனி ஒரு தற்காப்பு அணித்தலைவர். அவர் எளிதில் எதிரணியை ஆதிக்கம் செலுத்த விட்டு வேடிக்கை பார்ப்பார். அவர் இந்தியாவின் தலைசிறந்த தலைவர் தான். அவர் இந்திய மண்ணில் அதிக சாதனைகளை படைத்திருக்கிறார். ஆனால் இது ஒன்றும் சிறப்பான விஷயம் இல்லை. கோஹ்லியை தலைவர் ஆக்க வேண்டும். நமக்கு ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஒரு தலைவர் வேண்டும்" என்று கூறியுள்ளார்.