உலகின் டாப் 10 பணக்கார நாடுகளில் இந்தியா
லண்டன் : உலகின் டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம்பிடித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவின் சொத்துமதிப்பு 211 சதவீதம் அதிகரித்திருப்பதாக சமீபத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. இது அமெரிக்கா, ஐரோப்பா, ஜப்பான், பிரான்ஸ், ஜெர்மனி அல்லது பிரேசில் நாடுகளின் 15 வருட சொத்து மதிப்பு உயர்வை விட அதிகமாம்.இந்தோனேஷியா, சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் சொத்து மதிப்பு இந்தியாவை விட அதிகம். இந்தோனேஷிய சொத்து மதிப்பு 362 சதவீதமும், சீனாவின் சொத்து மதிப்பு 341 சதவீதமும், ரஷ்யாவின் சொத்து மதிப்பு 253 சதவீதமும், ஆஸ்திரேலியாவின் சொத்து மதிப்பு 248 சதவீதமும் அதிகரித்துள்ளது. இந்த 15 ஆண்டுகளில் ஜப்பான் (39%), அமெரிக்கா (41%), இங்கிலாந்து (58%) மட்டுமே சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது.
2000ம் ஆண்டில் இந்தியாவில் 900 அமெரிக்க டாலர்களாக இருந்த சராசரி தனிமனித வருமானம், 2015ல் 2800 அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. தற்போதைய மொத்த சொத்துமதிப்பின் அடிப்படையில் கணக்கிடுகையில் உலகின் டாப் 10 பணக்கார நாடுகளின் பட்டியலில் இந்தோனேஷியா, சீனா, ரஷ்யா, ஆஸ்திரேலியாவைத் தொடர்ந்து இந்தியா 5வது இடத்தில் உள்ளது. இந்த டாப் 10 பட்டியலில் பிரேசில்(6), தென்கொரியா(7), பிரான்ஸ் (8), கனடா(9), ஸ்விட்சர்லாந்து(10) இடத்திலும் உள்ளன. பணக்காரர்களின் எண்ணிக்கை மற்றும் பணக்கார நகரங்களின் எண்ணிக்கையில் அதிவேகமாக உயர்ந்து வரும் ஆசிய பசிபிக் நாடும் இந்தியா தானாம்.
பணக்கார இந்திய நகரம்:
2004 முதல் 2014ம் ஆண்டு வரையிலான கணக்கீட்டின் படி பணக்கார இந்திய நகரங்களின் பட்டியலில் புனே முதலிடத்தில் உள்ளது. ஆசியாவிலேயே அதிக பணக்காரர்களை கொண்ட 3வது நகரமும் புனே தான். அதிக பணக்காரர்களைக் கொண்ட இந்திய நகரங்களின் பட்டியலில் மும்பை, ஐதராபாத், டில்லி ஆகிய நகரங்கள் இடம்பிடித்துள்ளன.