யமஹா YZF-R15 வெர்ஷன் 1.0 ரிட்டர்ன்ஸ்!
அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில், யமஹா நிறுவனம், 2008 முதல் 2011 வரை விற்பனையில் இருந்த YZF-R15 வெர்ஷன் 1.0 மாடலை, YZF-R15 S எனும் புதிய பெயரில், பைக்கை இன்று வெளியிட்டுள்ளது. அதனால், பழைய பைக்கில் இருந்த சிங்கிள் சீட், வழக்கமான பல்ப் கொண்ட டெயில் லைட் ஆகியவை இதிலும் தொடர்கின்றன. மற்றபடி, 149.8 சிசி கொண்ட சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்ட், ஃபியுவல் இன்ஜெக்ஷன் மற்றும் 6 ஸ்பிட் கியர்பாக்ஸ் கொண்ட இன்ஜின், 17PS@8,500rpm பவரையும், 15N.m@7,500rpm டார்க்கையும் வெளிப்படுத்துகிறது
ஆனால், புதிய கிராபிக்ஸ், YZF-R15 வெர்ஷன் 2.0 மாடலில் இருக்கும் எக்ஸாஸ்ட் மற்றும் ரி-டியுன் செய்யப்பட்ட இன்ஜின், அகலமான டயர்கள் கொண்ட புதிய அலாய் வீல்கள், புதிய பின்பக்க ஸ்பிளிட் கிராப் ரெயில், அலுமினியம் ஸ்விங் ஆர்ம், பெரிய பின்பக்க டிஸ்க் பிரேக் என தேவையான மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. தவிர, பின்பக்க சீட் 10mm உயரம் குறைக்கப்பட்டு, 790mm என்ற அளவில் உள்ளது. இதனால், பைக்கின் நிளம் 25mm உயர்ந்து, 1995mm என்ற அளவில் உள்ளது. மேலும், பைக்கின் வீல் பேஸ் 55mm குறைக்கப்பட்டு, 1290mm என்ற அளவில் உள்ளது.
இந்த டெக்னிக்கல் மாற்றங்களால், பைக்கின் எடை 5 கிலோ குறைந்து, 131 கிலோ என்ற அளவில் உள்ளது நல்ல விஷயம். YZF-R15 வெர்ஷன் 2.0 மாடலுடன் ஒப்பிடும்போது, இந்த மாற்றங்கள், பைக்கை நகர சாலைகளில் எளிதாகவும், சொகுசாகவும் வளைத்து நெளித்து ஓட்டுவதற்கு கண்டிப்பாக உதவும். 3 நிறங்களில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த பைக்கின் டெல்லி எக்ஸ் ஷோரும் விலை, ரு. 1,14,741 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.