U S open 2015 பைனலில் ஜோகோவிச் பெடரர்
நியூயார்க்: அமெரிக்க ஓபன் டென்னிஸ் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் உலக நம்பர் 1 வீரர் நோவாக் ஜோகோவிச், சுவிஸ் வீரர் ரோஜர் பெடரருடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.நியூயார்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில், ஆடவர், மகளிர் ஒற்றையர் பிரிவுகளில் நேற்றிரவு அரையிறுதி ஆட்டங்கள் நடந்தன.ஆடவர் ஒற்றையர் அரையிறுதி ஆட்டத்தில் உலக நம்பர் 1 வீரரான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச், நடப்பு சாம்பியனான குரேஷியாவின் மரீன் சிலிச்சுடன் மோதினார். இதில், நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார் ஜோகோவிச். கால் பாதத்தில் ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்ட சிலிச், 37 தூண்டப்படாத தவறுகளைச் செய்தார். 8 முறை சிலிச்சின் சர்வீஸ் கேம்களை முறியடித்தார் ஜோகோவிச். 1 மணி 25 நிமிடங்கள் மட்டுமே நீடித்த இந்தப் போட்டியில் ஜோகோவிச் 6-0, 6-1, 6-2 என நேர் செட்களில் சிலிச்சை வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார்.
இருவரும் 14 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். இவற்றில் 14 முறையும் ஜோகோவிச்சே வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மற்றொரு அரையிறுதியில் 17 முறை கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவரான சுவிட்ஜர்லாந்தின் ரோஜர் பெடரர், சக நாட்டவரான வாவ்ரிங்காவுடன் மோதினார். சிறப்பான பார்மில் உள்ள ரோஜர் பெடரர், 92 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் 6-4, 6-3, 6-1 என நேர் செட்களில் வாவ்ரிங்காவை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறினார். நாளை நடைபெற உள்ள ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டியில் ரோஜர் பெடரருடன், நோவாக் ஜோகோவிச் மோத உள்ளார்.