ப்ராஸ்டேட் சுரப்பி(Prostate Gland) என்பது என்ன? எங்கிருக்கிறது? அதன் அறிகுறிகள், சிகிச்சை முறைகள் - ஒரு முக்கியத் தகவல்
ப்ராஸ்டேட் சுரப்பி என்பது ஆண்களின் இனப்பெருக்க உறுப்புகளை சார்ந்த ஒரு உறுப்பாகும். இது சிறுநீர்ப்பையின் அடிப்புறம் ஆண்குறியின் மேற்புறம் சிறுநீர்ப்பையும் வெளிசிறுநீர்க் குழாயும் சேரும் இடத்தில் ஒரு நெல்லிக்காய் அளவு உள்ளது. இதன் வேலை ஆண் உயிரணுக்களை கொண்ட விந்துவின் அளவை அதிகரிக்கும் திரவங்களை சுரப்பதாகும்.
50 வயதை கடந்த சில ஆண்களுக்கு இந்த ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் அடைந்து சிறுநீர் வரும் பாதையை தடை செய்கிறது. இதனால் சிறுநீர் கழிப்பதில் சிரமம், அடிக்கடி சிறுநீர் கழித்தல், முக்கி முக்கி சிறுநீர் கழிக்க வேண்டி வருதல், சிலருக்கு கழிக்கையில் வலி ஆகிய தொந்தரவுகள் வரலாம்.
ப்ராஸ்டேட் வீக்கம் மிக அதிகமானால் சிறுநீர் முற்றிலும் வராமல் அடைத்துப் போகலாம். சிறுநீர்ப்பையில் கிருமித் தாக்குதல், சிறுநீர்ப்பையில் கல், சிறுநீர் அடைப்பினால் சிறுநீர்ப்பையில் ஏற்படும் அழுத்தம் பின்வழியே மேலேறி சிறுநீரகங்களையே பாதித்து சிறுநீரக செயலிழப்பு கூட நேரிடலாம்.
ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கத்தின் வெளிப்பாடுகள் பல விதமாக இருக்கலாம். எல்லார்க்கும் எல்லாவிதமான அறிகுறிகளும் இருக்க வேண்டி அவசியம் இல்லை. அவையாவன
2. சிறுநீர் கழிக்கச் செல்லும் போது சிறிது நேரம் கழித்தே சிறுநீர் வரத்தொடங்குதல், அவசரமாக அடக்க முடியாமல் சிறுநீர் கழிக்க வேண்டி வருதல்
3. சிறுநீர்க் கழித்து முடிந்த பிறகு சொட்டு சொட்டாக சிறுநீர் கசிதல்
4. அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டி வருதல் மிக முக்கியமாக இரவில்
5. முக்கி, முக்கி சிறுநீர் கழிக்க வேண்டி வருதல்
6. சிறுநீர் கழிக்கும் போது அடிவயிறு, ஆண்குறியின் அடிப்புறம் வலி
7. சிறுநீர்க் கழித்து முடித்தவுடன் மீண்டும் சிறுநீர்க் கழிக்கத் தோன்றும் உணர்வு.
இத்தகைய ஆரம்ப தொந்தரவுகள் சிலருக்கு எதுவுமே இல்லாமல் இருந்து திடீரென ஒரு நாள் சிறுநீர் கொஞ்சமும் வராமல் அடைத்து சிறுநீர்ப்பை வீங்கி அதிக வலி உண்டாகலாம். அதிக குளிர்ச்சையான தட்பவெப்ப நிலை, சில வகை மருந்துகள், சில ஒவ்வாமைகள், மது அருந்துதல் ஆகியன இந்த நிலமைக்கு காரணமாக இருந்திருக்கலாம்.
மேற்கூறிய தெரந்தரவுகள் உள்ள போது ஒரு சிறுநீரக மருத்துவரை அணுக வேண்டும்.
அவர் கடந்த ஒரு மாதத்தில் உங்களுக்கு இருந்த தொந்தரவுகள் அவற்றின் கடுமை ஆகியவற்றை அட்டவணையிட்டு ஆராய்வார் இது உங்கள் ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தின் கடுமையைப் பற்றி அவருக்கு ஒரு அனுமானத்தைத் தரும்.
அடுத்ததாக மலத்துவாரம் வழியே எண்ணை போன்ற திரவத்தை தடவிய கையுறை இட்ட ஒரு விரலை உள்ளே செலுத்தி அவர் உங்கள் ப்ராஸ்டேட் சுரப்பியை தடவி, உணர்ந்து , அழுத்திப் பார்த்து அதன் அளவு , கடினத் தன்மை ஆகியவற்றை ஆய்வு செய்வார்.
இதைத் தவிர கிழ்கண்ட பரிசோதனைகள் தேவைப்படும்
2. இரத்தத்தில் PSA- (Prostate Specific Antigen) என்ற பொருளின் அளவு. இது ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கம் சாதாரண வீக்கதானா அல்லது ப்ராஸ்டேட் சுரப்பியில் ஏதும் புற்று நோய் இருக்க வாய்ப்புள்ளதா என்பதை கண்டறிய உதவும்.
3. ப்ராஸ்டேட் சுரப்பியின் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை
சிலருக்கு மட்டும் கீழ்க்கண்ட பரிசோதனைகள் தேவைப்படலாம்
1. அடிவயிற்றின் எக்ஸ் - ரே படம்
2.சிறுநீர் கழிவதன் வேகம், தடைபடும் விதம் ஆகியவற்றின் தன்மையை கண்டறியும் கழிவோட்ட பரிசோதனை.
3. சிறுநீர்பை உள்நோக்கி (சிஸ்டோஸ்கோப் - cystoscope) பரிசோதனை.
4.ப்ராஸ்டேட் சுரப்பியலிருந்து சிறு திசுத் துணுக்கு எடுத்து பரிசோதித்தல (பயாப்ஸி – Biopsy)
ப்ராஸ்டேட் சுரப்பி வீக்கம் உள்ளவர்களின் 3-ல் ஒருவருக்கு தொந்தரவுகள் அதிகமாக இல்லாமல் இருப்பதோடு வீக்கத்தின் கடுமையும் குறைவாகவே இருக்கும். இவர்களுக்கு பிரத்யேக சிகிச்சை எதுவும் தேவைப்படாது. தொடர்ந்து கண்காணித்தல் போதுமானது.
சிலருக்கு வீக்கம் கடுமையாக இருந்து சிறுநீர் வருவது முற்றிலும் அடைக்கப்பட்டு விடலாம். அல்லது சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேங்கி வருவது முற்றிலும் அடைக்கப்பட்டு விடலாம். அல்லது சிறுநீர்ப்பையில் சிறுநீர் தேங்கி அதன் அழுத்தம் அதிகமாகி அவ்வழுத்தம் பின்னோக்கி சென்று சிறுநீரகங்களையும் பாதித்து சிறுநீரக செயலிழப்புக்கு கூட கொண்டு செல்லலாம். இத்தகையவர்களுக்கு TURP (Trans Urethral Resection of Prostate) எனப்படும் சிறுநீரக உள்நோக்கி கருவி வழியே அறுவை சிகிச்சை மூலம் வீங்கியுள்ள ப்ராஸ்டேட் சுரப்பியின் திசுக்களை சுரண்டி எடுத்தல் தக்க சிகிச்சையாக இருக்கும்.
1.5 ஆல்பா ரிடக்டேஸ் இன்ஹிபிடார் (5- Alpha Reductase inhibitor) வகையைச் சார்ந்த மருந்துகள் ஃபினாஸ்டிரைட் (Finastride). இந்த மருந்து ப்ராஸ்டேட் சுரப்பியின் வீக்கத்தை அதிகரிக்கச் செய்யும் ஒரு ஹார்மோனை எதிர்த்து செயலாற்றி ப்ராஸ்டேட் சுரப்பியை சுருங்கச் செய்கின்றது.
2.a ஆல்பா-1 இன்ஹிபிடார் (Alpha -1 inhibitor) உதார:- ப்ரசோசின் (Prazocin) டாக்சாசோசின் (Doxazocin) ஆகியன. . ஆல்பா 1-2 இன்ஹிபிடார் (Alpha 1-2 inhibitor)வகையைச் சேர்ந்த டாம்சுலோசின்(Tamsulocin) என்ற மருந்து இவ்விரு வகை மருந்துகளும் சிறுநீர்ப்பையின் கீழ்பாகத்தில் தசைகள் இறுக்கமாக பிடிப்புடன் இருப்பதை தளர்த்தி சிறுநீர் எளிதாக வெளிவர வழி செய்கின்றன. இம்மருந்துகள் வெவ்வேறு வகையான பெயர்களில் கிடைக்கும் கண்டிப்பாக மருத்துவரின் ஆலோசனை பெற்றே உங்களுக்கு உகந்த மருந்துகளை உட்கொள்ள வேண்டும்.
அறுவை சிகிச்சை முறைகள்
இவை மருந்துகளால் சரி செய்ய இயலாத அளவு வீக்கம் உள்ளவர்களுக்கு தேவைப்படுகின்றது.
1. சிறுநீரக உள்நோக்கி கருவி மூலம் ப்ராஸ்டேட் சுரப்பியின் வீங்கிய பாகத்தை சுரண்டி எடுத்தல் (TURP - Trans Urethral Resection of Prostate ) எனப்படும் சிகிச்சை இதில் தோலை கிழித்து ப்ராஸ்டேட் சுரப்பியை எடுத்து விட வேண்டியது இல்லை. ஆஸ்பத்திரியில் தங்கும் நாட்களின் அளவு குறைவு. சிரமங்களும் குறைவு.
2. வெளிப்புற ப்ராஸ்டேட் அறுவை சிகிச்சை (Open Prostatectomy) சிலருக்கு TURP அறுவை சிகிச்சை செய்ய முடியாத அளவு மிக்ப்பெரிய ப்ராஸ்டேட் வீக்கம் அல்லது கூடுதலாக சிறுநீரகப்பையில் கற்கள் ஆகியன இருந்தால் சிறுநீர்க் குழாய் வழியே செல்லாமல் வெளியிலிருந்து அடிவயிறு வழியாக வயிற்றை திறந்து ப்ராஸ்டேட் சுரப்பியை அகற்றும் அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம் இதில் அடி வயிற்றின் வழியே ஒரு ப்ளாஸ்டிக் ஃரப்பர் குழாய் புண் ஆறும் வரை வைத்திருக்க வேண்டும். மருத்துவமனையில் தங்கும் நாட்கள் கூடுதலாக இருக்கும்.
3. சிறுநீர்க்குழாயினுள் செயற்கை குழாய் பொறுத்துதல், சிறுநீர்க்குழாய்களை பலூன் மூலம் வரிவுபடுத்துதல் ( Urethral stent Placement / Urethral Baloon Dilation - Uretheroplasty) சிறுநீர்க்குழாய் அடைக்கப்பட்டுள்ள பாகத்தை தாண்டிச்செல்லும் வகையில் செயற்கை குழாய் பொறுத்துதல் அல்லது பலூன் அல்லது சில உபகரணங்கள் மூலம் சுருங்கிய அடைப்பட்ட பாகத்தை விரிவுபடுத்துதல். இந்த சிகிச்சை சிலருக்கு பொருந்தலாம்.
4. ரேடியோ அலை ப்ராஸ்டேட் சுரப்பி நீக்க சிகிச்சை( TURF - TransUrethral Radio Frequency ablation of Prostate )
சக்தி வாய்ந்த ரேடியோ அலைகள் மூலம்(மைக்ரோவேவ் போல) வீங்கிய ப்ராஸ்டேட் சுரப்பியை அதனை சுற்றியுள்ள திசுக்களை சேதப்படுத்தாது நீக்குதல்.
வேறு வகை சிகிச்சை முறைகள்
சில வகையான மூலிகை மருந்துகள் உதாரணம் - சா பால்மிட்டொ என்ற மூலிகை ஒரு சிலருக்கு கஷ்ட நிவாரணம் அளிப்பதாக நவீன விஞ்ஞான பூர்வ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. இவற்றையும் மருத்துவரின் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது.
ஒரு நாளைக்கு 8 டம்ளர் (முடிந்த வரை தண்ணீர்) நீராகரமாக அருந்த வேண்டும். சிறுநீர் கழிக்க வேண்டும். இரவு படுக்க செல்லும் போது அதிக தண்ணீர் அருந்தக்கூடாது. காபி, டீ, மது வகைகள் (பீர் உட்பட) சிறுநீரின் அளவை மிகவும் அதிகரிக்கும். இவற்றை தவிர்ப்பது அல்லது குறைந்த அளவு உபயோகிப்பது நல்லது.
2. சிறுநீர் கழிக்கும் முறை
சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றியவுடன் சிறுநீர் கழிக்க வேண்டும். தள்ளிப் போடக் கூடாது. முக்கி போகக் கூடாது முறையான இடைவெளிகளில் சிறுநீர் கழிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு முறை சிறுநீர் கழித்த பின்பு உடனே இன்னுமொரு முறை சிறுநீர் கழித்து சிறுநீர்ப்பையை முழுவதுமாக காலி செய்ய முயற்சிக்க வேண்டும்.
3. எப்படி உட்கார்வது?
ஆண்குறியின் அடிப்பாகத்தை உறுத்தும் அல்லது அழுத்தி வலியுண்டாக்கும் தன்மையுள்ள மிருதுவான இருக்கைகளில் அமரக்கூடாது.
4. மருந்துகள்
உங்களுக்கு மருத்துவரால் பரிந்துரைக்கபட்ட மருந்துகளை தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். பொதுவாக இவற்றின் முழுகுணம் தெரிய சில வாரங்கள் ஆகலாம். சில வகை சளி மருந்துகள், மனத்தளர்ச்சிக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகள் சிறுநீரகக் குழாய்கள் தசைகளை சுருக்கி சிறுநீர் வருவதை மேலும் தடை செய்யக்கூடும். இத்தகைய மருந்துகளை மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே எடுத்துக் கொள்ளுங்கள். மருந்துகளின் மூலமும் சிலருக்கு அறுவை சிகிச்சை மூலமும் நல்ல முன்னேற்றம் வரும் போது நீங்கள் தாம்பத்ய உறவுகளையும் மீண்டும் தொடங்கலாம்.
ஆரோக்கியமான உணவு முறைகள், தினசரி உடற்பயிற்சிகள், பொழுது போக்குகள் ஆகியனவும் இவ்வகை தொந்தரவுகளை பெருமளவு சீர்படுத்த உதவும்.