முதல் முறையாக விளம்பரத்தில் நடிக்கிறார் கமல்ஹாசன்!











தீபாவளி பண்டிகையையொட்டி பிரபல ஜவுளி நிறுவனத்திற்காக விளம்பரப் படங்களில் நடிக்கிறார்  கமலஹாசன். 55 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில், நடிகர் கமலஹாசன் விளம்பரத்தில் நடிப்பது இதுவே முதல் முறை.

நடிகர் கமலஹாசனுக்கு தற்போது 60 வயதாகிறது. இதுவரை அவர் எந்த கமர்ஷியல் விளம்பரத்திலும் தோன்றியது இல்லை. தற்போதுதான் முதல் முறையாக அத்தகைய விளம்பரங்களில் தோன்றப் போகிறார்.

நெல்லையை சேர்ந்த  போத்தீஸ் நிறுவனம்  அவரை வளைத்து போட்டிருக்கிறது. இந்த நிறுவனம் சார்பாக,  தீபாவளி பண்டிகையையொட்டி வெளியிடப்படவுள்ள விளம்பரங்களில் நடிகர் கமலஹாசன் நடிக்கிறார்.

இதற்கான படப்பிடிப்பு சென்னை புறநகர் பகுதியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் நேற்றுத் தொடங்கியது. கமலஹாசன் பேண்ட் சர்ட் போட்டுக் கொண்டு நடிப்பது போல காட்சி முதன் முதலாக படமாக்கப்பட்டது.

கமலஹாசன் தங்கள் நிறுவன விளம்பரங்களில் தோன்றுவது குறித்து போத்தீஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ். ரமேஷ் கூறுகையில், '' கடந்த இரண்டு ஆண்டு காலமாக எங்கள் நிறுவன விளம்பரங்களில் கமலஹாசனை நடிக்க வைக்க முயற்சித்து வந்தோம். இப்போதுதான் அதற்கான காலம் கனிந்துள்ளது " என்றார். ஆனால் அவருக்கு எவ்வளவு தொகை சம்பளமாக வழங்கப்பட்டது? என்பதை தெரிவிக்க ரமேஷ்  மறுத்து விட்டார்.

கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கத்தில் படமாக்கப்படும் இந்த விளம்பரங்களுக்கு,  ஜிப்ரான் இசையமைக்கிறார்.இதற்கு முன் எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் நலனுக்காக நிதி திரட்டுவதற்காக அரசு விளம்பரத்தில் நடிகர் கமலஹாசன் தோன்றியுள்ளார்.





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad