பாகுபலிக்கு முன்பே வெளியாகியிருக்க வேண்டிய புலி
சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் எதிர்பார்ப்புகளின் உச்சத்தில் வெளியாகவிருக்கும் படம் புலி. இப்படம் பற்றியான சில சுவாரஸ்ய தகவல்களும் ரசிகன் அறியாத செய்திகளும் இதோ,
இங்லீஷ் விங்லீஷ் படம் ஸ்ரீதேவிக்கு 2012ல் வெளியானது. அதன் பிறகு எந்தப் படத்திலும் நடிக்காமல் இருந்தார். காரணம் என்னவென்று விசாரித்ததற்கு அவர் கேட்ட கதைகள் எதிலுமே ஈடுபாடு இல்லாமல் போனதுதானாம். பிறகு சிம்புதேவன் புலி படக் கதையைக் சொன்னதுமே ஓகே சொல்லிவிட்டாராம் ஸ்ரீதேவி. அதுமட்டுமில்லாமல் தமிம், ஹிந்தி, தெலுங்கு உள்ளிட்ட மூன்று மொழியிலும் அவரே சொந்தக்குரலில் டப்பிங் பேசியிருக்கிறார். புலி படம் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் உலகமெங்கும் 3000 திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. அதில் சென்னையில் மட்டும் 35 திரையரங்குகளுக்கு மேல் திரையிடப்படுகிறது. நவீன தொழில்நுட்பமான டால்ஃபி அட்மாஸ்பியர் ஒலியில் அரங்குகளில் ரசிக்கலாம்.
படப்பிடிப்பின் போது அங்கு பணியாற்றியவர்களுக்கே சில காட்சிகள் ஏன் எடுக்கிறார்கள் என்று குழப்பத்திலேயே இருந்தார்களாம். படம் முடிந்து திரையில் பார்க்கும் போது பிரம்மிப்பின் உச்சத்திற்கே சென்றிருக்கிறார்கள்.
ஒரு கன்னியும் மூணு களவானியும் படத்திற்கு முன்னரே புலி படக் கதையை ரெடி செய்துவிட்டார் சிம்புதேவன். கதையை எழுதும் போதே விஜய்யை மனதில் வைத்தே உருவாக்கியிருக்கிறார். நான்கு வருடமாகவே கலை இயக்குநர் முத்துராஜுடன் புலி படத்திற்கான சந்திப்பில் இருந்திருகிறார். விஜய் கால்ஷீட் கிடைக்கவே தாமதமாகியிருக்கிறது இல்லையெனில் பாகுபலி வெளியாகும் முன்பே புலி வெளியாகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்திற்கு முதுகெலும்பே கலை வடிவமும், கிராஃபிக்ஸூம் தான். கலை இயக்குநராக முத்துராஜ் பணியாற்றியிருக்கிறார். கிராஃபிஸ் காட்சிகளை கமலக்கண்ணன் கவனித்திருக்கிறார். நான் ஈ படத்தில் 1200 கிராஃபிக்ஸ் ஷாட்ஸ். பாகுபலியில் 2000. அதையெல்லாம் விட புலியில் 2400 கிராஃபிக்ஸ் ஷாட்ஸ் இருக்கிறது என்கிறார் கமலக்கண்ணன்.
ராணியாக ஸ்ரீதேவி, இளவரசியாக ஹன்சிகா நடித்திருக்கிறார். ஹன்சிகாவிற்கு மேக்கப் போட மட்டும் 3 மணிநேரம் எடுக்குமாம். 9மணி ஷூட்டிங்கிற்கு 6 மணிக்கே வந்து மேக்கப் போட ஆரம்பித்துவிடுவாராம் ஹன்சிகா.
பாகுலியுடன் புலியை ஒப்பிடாதீர்கள். பாகுபலி போர் சார்ந்த கதைத் தளம். ஆனால் புலி படம் முழுக்க முழுக்க காமெடி கலந்த பேண்டசி படம் என்று முன்னரே கூறிவிட்டார் இயக்குநர் சிம்புதேவன்.
விஜய்யிடம் சிம்புதேவன் கதை சொல்லவுமே உடனே விஜய்க்கு கதை பிடித்துவிட்டதாம். எந்த மாற்றமும் வேண்டாம் அப்படியே படப்பிடிப்புக்குச் செல்லலாம் என்றிருக்கிறார் விஜய். ஷூட்டிங் நேரத்தில் அடுத்த நாள் எடுக்கவிருக்கும் காட்சிகளின் வசனத்தை முன் தின இரவே மனப்பாடம் செய்துவிடுவாராம் விஜய். இப்படத்திற்காக பிரத்யேக வாள் பயிற்சியும் எடுத்திருக்கிறார்.
படத்திற்கான செட் சென்னை ஆதித்யா ராம் ஸ்டூடியோவில் அமைத்திருக்கிறார்கள். படத்தின் பிரம்மாண்டத்திற்கு ஜிங்கிலியா பாடலே ஒரு சான்று. அதுபோல பல வித்தியாசமான செட்டுகள் மற்றும் வித்தியாசமான காட்சிகள் தமிழுக்கு புதுவரவு என்கிறது படக்குழு.
விஜய் தான் நடிக்கும் படத்தில் ஒரு பாடலாவது பாடிவிடுவார். இப்படத்தில் ஏண்டி ஏண்டி பாடலை ஸ்ருதியுடன் இணைந்து பாடியிருக்கிறார். பாடல் காட்சிகள் கேரளாவிலும், தாய்லாந்திலும் படமாக்கியிருக்கிறார்கள்.