கேப்டன் பதவியை நிரந்தரமாக இழக்கிறார் தோனி
தென்ஆப்ரிக்க அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின் போது, இந்திய ஒருநாள் போட்டிக்கான அணிக்கும் விராட் கோலியை கேப்டனாக நியமிக்க பி.சி.சி.ஐ
ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து தோனி ஓய்வு பெற்ற பிறகு, துணை கேப்டனாக இருந்த விராட் கோலி இந்திய அணியின் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையில், இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி, டெஸ்ட் தொடரை கைப்பற்றியது.
இந்நிலையில் தென்ஆப்ரிக்க அணி அடுத்த மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. அந்த அணியின் இந்திய சுற்றுப்பயணத்தின்போது, இந்திய அணியின் ஒருநாள் அணிக்கும் விராட் கோலியே நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தோனியை 20 ஓவர் போட்டிக்கு மட்டும் கேப்டனாக நியமித்தால் போதுமென்ற மனநிலையில், இந்திய அணியின் தேர்வுக்குழுவினர் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் நடைபெறவுள்ள ஒரு மிகப் பெரியத் தொடருக்கு கேப்டனாக இருக்கும்பட்சத்தில், விராட் கோலிக்கு மிகப் பெரிய அனுபவம் கிடைக்கும் என்றும், பிற்காலத்தில் அது நல்ல பலனை அளிக்கும் என்றும் தேர்வுக்குழுவினர் கருதுகின்றனர். எனினும் இந்த சமயத்தில் தோனியின் கருத்தையும் கேட்டு அதற்கு பின்னரே முடிவெடுக்கவேண்டுமென்பதிலும் தேர்வுக்குழுவினர் தெளிவாக உள்ளனர்.
தென்ஆப்ரிக்க சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல், வரும் 15ஆம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.