தோனியா...கோஹ்லியா: கேப்டன் தேர்வில் புது குழப்பம்
புதுடில்லி: ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு தோனிக்குப் பதில் கோஹ்லியை கேப்டனாக்க திட்டம் வகுக்கப்பட்டு வருகிறது.
இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி 3 ‘டுவென்டி–20’, 5 ஒருநாள் மற்றும் 4 டெஸ்ட் என, 72 நாட்கள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
முதலில் ‘டுவென்டி–20’ போட்டிகள் வரும் அக்., 2ல் தரம்சாலா, 5ல் கட்டாக், 8ல் கோல்கட்டாவில் நடக்கின்றன. பின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர் நடக்கும். தற்போதைய நிலையில் கடந்த ஆண்டு டெஸ்ட் அரங்கில் இருந்து விடைபெற்ற தோனி, ‘டுவென்டி–20’, ஒருநாள் அணிக்கு கேப்டனாக தொடர்கிறார்.
டெஸ்ட் அணி கேப்டனாக தேர்வு செய்யப்பட்ட கோஹ்லி, வித்தியாசமான திட்டங்களுடன் இலங்கை மண்ணில் தொடரை வென்று அசத்தினார்.
புதிய கோரிக்கை: இதையடுத்து, ‘டுவென்டி–20’, ஒருநாள் அணிக்கும் கோஹ்லியை கேப்டனாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இதனால், தென் ஆப்ரிக்க தொடரில் ஒருநாள் போட்டி அணிக்கு, தோனியை நீக்கிவிட்டு கோஹ்லியை கேப்டனாக கொண்டு வரலாமா என இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தேர்வாளர்கள் யோசித்து வருகின்றனர்.
இதுகுறித்து வெளியான செய்தி:
கோஹ்லி, ரகானே, அஷ்வின், ரோகித் சர்மா, ஷிகர் தவான் உள்ளிட்டோர் மூன்று வித அணியிலும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக இருக்கும் கோஹ்லி, திடீரென தோனி அணியில் விளையாடும் போது சற்று வித்தியாசமான உணர்வைத் தரலாம்.
விரைவில் முடிவு: இதுகுறித்து கடந்த தேர்வாளர்கள் கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டது. அதேநேரம் தோனியை பொறுத்தவரையில் இந்திய அணி கேப்டன்களில் மிகவும் வெற்றிகரமானவராக உள்ளார். கோஹ்லி இப்போது தான் கேப்டனாக அடி எடுத்து வைக்கிறார்.
உறுதி இல்லை: கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து கேப்டனாக இருந்த போதும், தோனியின் பேட்டிங் திறன் சிறப்பாகத் தான் இருந்தது. இருப்பினும், கிரிக்கெட் வீரர்களைப் பொறுத்தவரையில் எல்லோரும் அணிக்கு வருவதும் போவதுமாகத் தான் இருப்பர். இது கேப்டனாக இருப்பவருக்கும் பொருந்தும்.
தோனி, தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிக் கட்டத்தில் தற்போது உள்ளார். டெஸ்டில் இருந்து விலகிய இவர், 2016 உலக கோப்பை தொடருக்குப் பின், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்பாரா என உறுதியாகத் தெரியவில்லை. இதனால் சொந்தமண்ணில் நடக்கவுள்ள தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு, கோஹ்லியை கேப்டனாக்க இது தான் சரியான தருணமாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை இந்த மாற்றம் நிகழ்ந்தாலும், 2016 உலக கோப்பை வரை ‘டுவென்டி–20’ அணியின் கேப்டன் பதவி விஷயத்தில் தோனிக்கு எவ்வித சிக்கலும் இருக்காது என்று கூறப்படுகிறது.
இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.
விரைவில் ‘டுவென்டி–20’ அணி
இந்தியா வரும் தென் ஆப்ரிக்க அணி முதலில் 3 ‘டுவென்டி–20’ போட்டிகளில் விளையாடுகிறது. இதற்குத் தயாராகும் வகையில் செப்., 29ல் பிரசிடென்ட் லெவன் அணியுடன் பயிற்சி போட்டியில் (20 ஓவர்) பங்கேற்கிறது. இதற்கான இந்திய அணி, வங்கதேச ‘ஏ’ அணிக்கு எதிரான தொடரின் (செப்., 16, 18 மற்றும் 20) போது செப்., 18ல் தேர்வு செய்யப்படும் எனத் தெரிகிறது. அதே தினத்தில் பயிற்சி ‘டுவென்டி–20’ போட்டிக்காக அணியும் அறிவிக்கப்படவுள்ளது.