பாகிஸ்தான் பவுலர் அர்ஷத் கான், சிட்னியில் டாக்சி டிரைவராக உள்ளார். பாகிஸ்தான் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் அர்ஷத் கான், 44. மொத்தம் 9 டெஸ்ட், 58 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றார். கடந்த 2006ல் சொந்த மண்ணில் நடந்த இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சச்சினை அவுட்டாக்கினார். கடந்த 2007ல் கபில் தேவ் துவக்கிய இந்தியன் கிரிக்கெட் லீக் (ஐ.சி.எல்.,) அமைப்பில் சேர்ந்ததும், இவரது வாழ்க்கை தடம் மாறிப் போன. இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) எதிராக துவக்கப்பட்ட ஐ.சி.எல்., அமைப்பு கலைக்கப்பட்டது. இதற்கு பின் பாகிஸ்தான் தேசிய அணியில் விளையாடும் வாய்ப்பு அர்ஷத் கானுக்கு கிடைக்கவே இல்லை. ஆஸ்திரேலியா சென்ற இவர், பிழைப்புக்காக வாடகை டாக்சி ஓட்டும் தொழிலை செய்து வருகிறாராம். இதுகுறித்து கணேஷ் பிர்லே என்பவர் கூறியது:
சிட்னியில் வாடகை காரில் சென்ற போது, டிரைவரிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போது அவர்,‘ பாகிஸ்தானில் இருந்து வந்து, சிட்னியில் வசிக்கிறேன்,’ என்றார். தவிர, ஐ.சி.எல்., தொடரில் லாகூர் பாட்ஷாஸ் அணிக்காக விளையாடிய போது, பலமுறை ஐதராபாத் வந்ததாகவும் கூற, உங்களது முழுப் பெயர் என்ன எனக் கேட்டேன். உடனே அவர்,‘ நான் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் அர்ஷத் கான்,’ என்று கூற, எனக்கு அதிர்ச்சியாகி விட்டது. பிறகு காரில் இருந்து இறங்கிச் செல்லும் போது, அவருக்கு கைகொடுத்து விட்டு, கனத்த இதயத்துடன் விடை பெற்றேன்.