ஜடேஜா இனி மீள முடியுமா ?
புதுடில்லி: தோனியின் ‘செல்லப்பிள்ளையான’ ரவிந்திர ஜடேஜாவின் நிலைமை தற்போது பரிதாபமாக உள்ளது. தென் ஆப்ரிக்க தொடருக்கான அணியில் வாய்ப்பு கிடைக்காத இவர், இனி மீண்டு வருவது கடினம் என கூறப்படுகிறது.
இந்திய அணியின் ‘ஆல் ரவுண்டர்’ ரவிந்திர ஜடேஜா, 26. தோனியின் தயவில் டெஸ்ட், ஒருநாள், ‘டுவென்டி–20’ என, அனைத்து வித அணியிலும் தவறாமல் இடம் பெற்றார்.
2013ல் உலகின் ‘நம்பர்–1’ பவுலர், ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 4 டெஸ்டில் 24 விக்கெட், 2013 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 12 விக்கெட், தங்கப் பந்து விருது, பேட்டிங்கிலும் அசத்தல் தொடர்ந்தது.
ரசிகர்கள் புலம்பல்:
ஆனால், சமீப காலமாக களத்தில் இவரது திறமையை பார்த்து, ‘ஜடேஜாவை ஏன் சேர்க்கின்றனர்,’ என புலம்பாத ரசிகர்களே இருக்க மாட்டார்.
‘ஓடமும் ஒருநாள் வண்டியில் ஏறும்... வண்டியும் ஒருநாள் ஓடத்தில் ஏறும்’ என்ற பழ.ெமெொழிக்கு ஏற்ப, இந்திய கிரிக்கெட் போர்டில் (பி.சி.சி.ஐ.,) ஏற்பட்ட மாற்றங்கள், ‘தல’ தோனியின் ‘தலைக்கே’ சிக்கல் ஏற்படுத்தியது.
மறுபக்கம் மோசமான ‘பார்ம்’ காரணமாக ஜடேஜாவின் பவுலிங்கும் பலவீனம் ஆனது. 2015 பிரிமியர் தொடரில் 17 போட்டியில் 11 விக்கெட் தான் வீழ்த்தினார். கடைசியாக களமிறங்கிய 11 ஒருநாள் போட்டியில் 10 விக்கெட் மட்டும் தான் வீழ்த்த முடிந்தது.
பேட்டிங் சொதப்பல்:
பேட்டிங்கும் ‘பெஸ்ட்’ ஆக இல்லை. கடந்த ஜூனில் நடந்த வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரின் 2 போட்டிகளில் முறையே 19, 32 ரன்கள் மட்டும் எடுத்து ரசிகர்களை வெறுப்பேற்றினார்.
எல்லாம் போச்சு:
கடைசியில் ‘ஆடிக்காற்றில் அடித்துச் செல்லப்படும் அம்மி’ போல தென் ஆப்ரிக்க தொடருக்கான அணியில் இருந்து துாக்கி எறியப்பட்டுள்ளார்.
எந்த ஹர்பஜன் சிங்கை ஓரங்கட்டி விட்டு அணிக்குள் நுழைந்தாரோ, இன்று அவருக்கே ‘டுவென்டி–20’ அணியில் இடம் கிடைத்துள்ளது. ஒருநாள் அணிக்கான இடத்தை அக்சர் படேல் கொண்டு சென்றுவிட்டார்.
ஒருவேளை அக்சர் படேல் மோசமாக செயல்பட்டால் மட்டுமே, ‘சர்’ (செல்லமாக) ஜடேஜாவுக்கு இடம் கிடைக்கும். அதற்கு முன் உள்ளூர் போட்டிகளில் திறமை நிரூபித்தாக வேண்டும்.