நடுவுல கொஞ்சம் வார்த்தைய காணம்
மருத்துவத்தில் மறதி
மறதி தாற்காலிகமானதாகவோ அல்லது நிரந்தரமானதாகவோ
இருக்கமுடியும். நினைவுகளைத் தேக்கி வைத்திருக்கும் மூளையின் சில பகுதிகள், முதுமை
அல்லது சில நோய்களால் பாதிக்கப்படும்போது, ‘மறதி’ ஏற்படுகிறது.
மறதியினால், புதிய விவரங்களை நினைவில்
வைத்துக்கொள்ள முடியாமல் போகலாம்; அல்லது ஏற்கெனவே அறிந்திருந்த விவரங்களை
மீண்டும் நினைவுக்குக் கொண்டுவர முடியாமலும் போகலாம்!
காலையில் சாப்பிட்ட இட்லியை மறந்துவிடும்
சிலர், ஹிட்லர் போர் புரிந்த இடம், வருடம் போன்ற விவரங்களை நன்கு நினைவில்
வைத்திருப்பர்!
தலைக் காயம்
பட்டவர்களுக்கு, மறதி (அம்னீஷியா) வரும் வாய்ப்புகள் அதிகம். அடிபடுவதற்கு முன்போ
அல்லது அடிபட்ட பின்போ, ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் நடந்தவற்றை மறந்துபோகின்ற
அபாயம் உண்டு. காக்காய் வலிப்பு வந்த பிறகு, சிறிது நேரத்துக்கு நடந்தது எதுவும்
நினைவில் நிற்பதில்லை!
முதுமையில் தவிர்க்க முடியாதது
மறதி!
பொருட்களை இடம் மாறித் தேடுவது, நாள், கிழமை மற்றும்
மிகச் சிறிய நிகழ்வுகள் நினைவுகளில் இருந்து நழுவுவது, முதுமையில் நாம் அன்றாடம்
காண்பதுதான்.
மூளையின் டெம்போரல், ஃப்ரான்டல் பகுதிகள்
பாதிக்கப்படுவதால் ஏற்படும் மறதி, அல்சைமர்ஸ் போன்ற வியாதிகளைக் குறிக்கக்கூடும்
(பிறந்தது முதல் நாம் கற்றவை, அறிந்தவை கொஞ்சம் கொஞ்சமாக நினைவிலிருந்து தொலைவது,
டிமென்ஷியா எனப்படும்).
அன்றாட ஏற்படும் சின்னச் சின்ன மறதிகளை, இந்த
வியாதிகளுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக்கூடாது. சோர்ந்து, தளர்ந்த மனது எதையும்
மறந்துவிடும் தன்மையுடையது! மனதுக்குப் பிடிக்காதது, எளிதில் நினைவிலிருந்து
நழுவிவிடும்.