ஐ.எஸ்.எல். தூதராக நடிகர் தனுஷ் நியமனம்!!!
ஐ.எஸ்.எல். தூதராக நடிகர் தனுஷ் நியமனம்
8 அணிகள் இடையிலான 2-வது
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து போட்டி இந்தியாவில் பல்வேறு
நகரங்களில் வருகிற 3-ந் தேதி முதல் டிசம்பர் 20-ந் தேதி வரை நடக்கிறது.
இந்த சீசனுக்கான ஐ.எஸ்.எல். போட்டியின் விளம்பர தூதராக முன்னணி தமிழ்
திரைப்பட நடிகர் தனுஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் கால்பந்து போட்டி
நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆட்டத்தை பிரபலப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்.
ஐ.எஸ்.எல். தூதராக நியமிக்கப்பட்ட நடிகர் தனுஷ் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு
அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டு இருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. சிறு வயது முதலே நான் கால்பந்து ரசிகன். கால்பந்து ஆட்டங்களை ரசித்து பார்ப்பேன். சிறுவயதில் தெருக்களில் கால்பந்து விளையாடி இருக்கிறேன். 90 நிமிடங்கள் விறுவிறுப்பாக அரங்கேறும் கால்பந்து ஆட்டம் எல்லோருக்கும் பிடித்தமானதாகும். ஐ.எஸ்.எல். போட்டி கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் ஆனதுடன் நல்ல வரவேற்பையும் பெற்றது. இந்த சீசன் கடந்த ஆண்டை விட விறுவிறுப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இந்த ஆண்டில் நிறைய திறமையான புதிய வீரர்கள் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
நமது நாட்டில் கிரிக்கெட் ஆட்டம் தான் பிரபலமாக விளங்குகிறது. இந்த போட்டியின் மூலம் கால்பந்து ஆட்டம் நிச்சயம் பிரபலம் அடையும். சினிமாவில் கால்பந்து வீரராக நடிக்க வாய்ப்பு கிடைத்தால் நடிப்பேன். அந்த பாத்திரத்துக்கு நான் பொருத்தமானவன் என்று நினைக்கிறேன்.
இவ்வாறு நடிகர் தனுஷ் கூறினார்.