கோஹ்லி : ஆக்ரோஷம் தேவையா ?
கிரிக்கெட் களத்தில் ஆக்ரோஷமாக செயல்படுவது தான் வெற்றியை தேடித்தரும் என நினைக்கிறார் கோஹ்லி. இந்த ‘பார்முலா’ தான் இலங்கை மண்ணில் இந்திய அணிக்கு கோப்பை வென்று தந்தது. கடந்த 1975 முதல் 1990 வரை என, 15 ஆண்டுகளாக வெஸ்ட் இண்டீஸ் அணி உலக கிரிக்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இதற்கு காரணம் அந்த அணி வீரர்களின் ஆக்ரோஷமான ஆட்டம். இதேபோல 1995 முதல் 2010 வரை என, 15 ஆண்டுகள் ஆஸ்திரேலிய அணி கொடி கட்டிப் பறந்தது. இதற்கு அந்த அணியினரின் ஆக்ரோஷம் தான் காரணம். ‘சிறந்த வெற்றியாளராக இருக்க வேண்டும் என விரும்பினால் களத்தில் எதிரிகளை வீழ்த்த இரக்கமற்ற முறையில் தான் செயல்பட வேண்டும்,’.இது விளையாட்டுக்கும் பொருந்தும். தங்கள் பாதைகளில் வருபவர்களை பின்தள்ளி, வீழ்த்துபவன் மட்டுமே சிறந்த வெற்றியாளராக, சிறந்த அணியாக இருக்க முடியும்.
ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக், ‘எதிரணிகளை களத்தில் மட்டும் வீழ்த்தாமல், தங்களை பார்த்தாலே அஞ்சி நடுங்கும் வகையில் இருக்க வேண்டும்,’ என விரும்புவார். இதைத் தான் இந்திய அணியிலும் கொண்டு வர விரும்புகிறார் டெஸ்ட் அணி கேப்டன் கோஹ்லி. ஏனெனில் இவர் தோற்க விரும்புவது இல்லை. தோல்வியை வெறுக்கிறார். எப்போதும் வெற்றி பெற வேண்டும் எனில், களத்தில் ஆக்ரோஷமாக இருப்பது முக்கியம் என்கிறார். இந்த உண்மையான அர்த்தத்தை நாம் வரவேற்க வேண்டும் அல்லது கோஹ்லியின் திட்டத்துக்கு மதிப்பு தர வேண்டும். ஏனெனில் வெஸ்ட் இண்டீசின் ஓய்வு பெற்ற வேகப்பந்து வீச்சாளர்கள் வால்ஸ், அம்புரோஸ், ஆஸ்திரேலிய அணியின் தற்போதைய மிட்சல் ஜான்சன் இப்படித் தான் செயல்படுவர். ஆனால், இஷாந்த் சர்மாவின் சிறுவயது பயிற்சியாளர் ஷ்ரவண் குமார், கோஹ்லி, ரவிசாஸ்திரி மீது குற்றம் சுமத்துகிறார். இவ்விஷயத்தில் கோஹ்லி மற்றும் அவரது சக வீரர்களை திட்டுவது நல்லதல்ல.
அதேநேரம் ஆக்ரோஷம் மட்டும் ஒரு அணியை சிறப்பானதாக மாற்றி விட முடியாது. பேட்ஸ்மேன்கள் தேவையான ரன்கள் எடுக்க வேண்டும். பவுலர்கள் சரியான நேரத்தில் விக்கெட் வீழ்த்த வேண்டும். அணி வெற்றி பெற வேண்டும் என்ற வேட்கை தன்னிடம் மட்டும் இருந்தால் போதாது, சக வீரர்களிடம் இருந்தாக வேண்டும் என விரும்புகிறார் கோஹ்லி.
எப்போதும் எதிரணியை சீண்டுவது, மோதுவது போன்ற செயல்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை. இதனால் ஏற்படும் அபராதம், தடை போன்ற தண்டனைகளை தவிர்க்க வேண்டும்.இப்போதுள்ள அணியில் இளம் கேப்டன், இளம் வீரர்கள் தான் உள்ளனர். அடுத்து பல்வேறு தொடர்களில் பங்கேற்கும் போது, எது எல்லை என்பதை கற்றுக் கொள்வர்.