வரலாறு படைத்தது இந்தியா !
கொழும்பு டெஸ்டில் இந்திய அணி 117 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. இதையடுத்து 22 ஆண்டுக்குப் பின் இலங்கை மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்தியா, இலங்கை அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் கொழும்புவில் உள்ள எஸ்.எஸ்.சி., மைதானத்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் இந்தியா 312, இலங்கை 201 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 274 ரன் எடுத்தது.
நான்காவது நாள் முடிவில், இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 67 ரன்கள் எடுத்து, 319 ரன்கள் பின்தங்கி இருந்தது. சில்வா (24), மாத்யூஸ் (22) அவுட்டாகாமல் இருந்தனர்.
மாத்யூஸ் சதம்: இன்று ஐந்தாவது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடந்தது. இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த இலங்கை அணிக்கு சில்வா 27 ரன்னில் அவுட்டாகி ‘ஷாக்’ கொடுத்தார். சற்று தாக்குப்பிடித்த திரிமான்னே (12) அஷ்வின் சுழலில் சிக்கினார். பின் இணைந்த கேப்டன் மாத்யூஸ், குசல் பெரேரா ஜோடி உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்தி விக்கெட் வீழ்ச்சியை தடுத்து நிறுத்தியது. மாத்யூஸ் டெஸ்ட் அரங்கில் 7வது சதம் கடந்தார். பெரேராவும் தன் பங்கிற்கு அரைசதம் அடிக்க, ஒரு கட்டத்தில் இலங்கை அணி வெற்றியை நோக்கி செல்லத் துவங்கியது.
பின் 6வது விக்கெட்டுக்கு 135 ரன் எடுத்த நிலையில் ஒருவழியாக பெரேரா (70), அஷ்வினிடம் வீழ்ந்தார். பல மணி நேரமாக தொல்லை கொடுத்துக் கொண்டிருந்த மாத்யூஸ் (110), இஷாந்த் சர்மா வேகத்தில் அவுட்டாக, இந்திய அணி பக்கம் வெற்றி திரும்பியது. ஹெராத் (11), பிரசாத் (6) அஷ்வின் ‘சுழல்’ வலையில் சிக்கினர். கடைசியில் பிரதீப்பை, அமித் மிஸ்ரா ‘டக்’ அவுட்டாக்க, இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 268 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 117 ரன் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்ற இந்திய அணி, 22 ஆண்டுக்குப் பின் இலங்கை மண்ணில் தொடரை வென்று வரலாறு படைத்தது.
டெஸ்ட் தொடரில் பங்கேற்க இந்திய அணி, 7வது முறையாக இலங்கை செனறது. முந்தைய 6 தொடர்களில் 3 முறை (1985, 2001, 2008) இலங்கை அணி கோப்பை வென்றது. இரண்டு முறை (1997, 2010) தொடர் சமன் ஆனது. 1993ல் மட்டும் அசார் தலைமையில் இந்திய அணி கோப்பை வென்றது. இம்முறை கோஹ்லி தலைமையிலான இளம் இந்திய அணி 2–1 என, தொடரை வென்று, இலங்கை மண்ணில் 22 ஆண்டுகளுக்கு பின் டெஸ்ட் கோப்பை கைப்பற்றியது.