‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ : நீக்கப்பட்ட காப்புரிமை
வார்னர் சாப்பல் மியூசிக் என்கிற நிறுவனம். 1988-ம் ஆண்டு ‘ஹேப்பி பர்த்டே டூ யூ’ என்ற பாடலுக்கான காப்புரிமையை கைப்பற்றியது. ஒரு திரைப்படத்திலோ, தொலைக்காட்சி நிகழ்ச்சியிலோ அந்தப் பாடலை பயன்படுத்த வேண்டுமானால் அதற்கு கட்டணமாக 1500 டொலரை (சுமார் 90 ஆயிரம் ரூபாய்) அந்த நிறுவனம் வசூலிக்கிறது. கட்டணம் செலுத்தாமல் பாடலைப் பயன்படுத்தினால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அபராதமும் வசூலிக்கிறது. ஹேப்பி பர்த்டே பாடல் வரிகளுக்கும், இசைக்குமான காப்புரிமை தன்னிடம் இருப்பதாகக் கூறி வார்னர் சாப்பல் நிறுவனம் இது வரை 15 கோடி டொலர் (சுமார் 900 கோடி ரூபாய்) சம்பாதித்திருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 1911-ம் ஆண்டு பாடல் வரிகள் எழுதப்பட்ட இந்தப் பாடல் முதல்முறையாக 1935-ம் ஆண்டுதான் வெளியிடப்பட்டது. அந்த மெட்டு 19-ம் நூற்றாண்டின் இறுதியில் பேட்டி ஹில், மில்ட்ரெட் ஹில் என்ற இரு சகோதரிகளால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இசைக்கான காப்புரிமை 95 ஆண்டுகளுக்கு மேல் செல்லுபடியாகாது என்பதை கோடிட்டுக் காட்டி, இனி ஹேப்பி பர்த்டே பாடல் அனைவருக்கும் சொந்தமானது என்ற வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை அமெரிக்காவின் மாவட்ட நீதிபதியான ஜார்ஜ் எச். கிங் வெளியிட்டுள்ளார். இதனால் கின்னஸ் சாதனை புரிந்த, பூமியின் மிகவும் புகழ்பெற்ற பாடலுக்கான தனி நபர் காப்புரிமையை அந்நிறுவனம் இழந்துள்ளது.