கடவுளைக் காப்பாற்றப் போர் புரிந்தவர்களைக் கடவுள் காப்பாற்றவில்லை-வேர்ல்டு க்ளாஸ் சினிமாஸ்







 





         போர்களும்,அக்கிரமங்களும்,வன்முறைகளும் பெருகிவிட்ட  இன்றைய சூழலில் மாபெரும் சினிமா கலைஞன் பர்க்மனின்  தி செவன்த் சீல் திரைப்படம்  மிகவும் முக்கியத்துவத்தைப் பெறுகிறது. படத்தின் கதையைப் பார்ப்போம்.

புனிதப்போரில் பங்கேற்றுவிட்டு தனக்காகக் காத்திருக்கும் மனைவியைக் காண கோட்டைக்குத் திரும்பிக் கொண்டிருக்கிறார் தளபதி அந்தோனியஸ் பிளாக் .தளபதியுடன் நண்பர் ஒருவரும் வருகிறார் .அவர்கள் கோட்டைக்குத் திரும்பும் வழியெங்கும்   பிளேக் நோய் பரவிக்கொண்டிருக்கிறது .குழந்தைகளும், பெண்களும் பிளேக் நோயினால்  புழு ,பூச்சியைப்போல மடிந்து கொண்டிருக்கின்றனர் . தளபதியையும்  பிளேக் நோய் தாக்கிவிடுகிறது..

இதற்கிடையில்  மதபோதகர்கள் மக்கள் தங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையைக் காப்பாற்ற சில பெண்களை, பிளேக் நோய் பரவக் காரணமானவர்கள் என்று பொய்க் குற்றம் சாட்டி தீயில் எரிக்கின்றனர். இன்னும் சிலர் விரைவில் உலகம் அழியப்போகிறது என்ற பீதியில் உறைந்து போயிருக்கின்றனர்.

இதையெல்லாம் பார்க்கும் தளபதிக்கு தன்னியல்பாகவே  பல கேள்விகள் எழுகின்றன இவ்வளவு அநீதிகளையும். அழிவுகளையும்  பார்த்துக் கொண்டு   எதையும் செய்யாமல் கடவுள் ஏன் மௌனமாக இருக்கிறார் ?  அப்படி கடவுள் மௌனமாக இருந்தால் மனிதன் எந்த விழுமியத்தின் அடிப்படையில் வாழ்வது ?

கடவுள் இருக்கிறார் என்றால் ஏன் எந்தப் பாவமும் அறியாத அப்பாவி மக்களும், குழந்தைகளும்  நோயினால் இறக்க வேண்டும் ?  என் முன் மரணம் நின்று கொண்டிருக்க மீதி வாழ்க்கை வெறுமை என்று அறிந்த பின் என்னால் எப்படி வாழ முடியும் ? இந்தக் கேள்விகளுக்கு விடையை அறிய  தன் மரணத்தை தள்ளித் வைக்கிறார்  தளபதி...அதற்காகவே மரண தேவனுடன் சதுரங்கம் ஆடுகிறார் ..

இறுதியில் இவ்வளவு அழிவுகளையும் அநீதிகளையும் பார்த்த தளபதி வாழ்க்கை ஒரு பயனற்ற   தேடல், வெற்றுக்காகிதம் ,ஒரு மாபெரும் அலைக்கழிப்பு ,அர்த்தமற்றது என உணர்கிறார் .அவருக்கிருந்த கடவுள் நம்பிக்கையும் போய்விடுகிறது  .தன் வாழ்க்கை மட்டுமல்ல எல்லோருடைய வாழ்கையும் ஒரு சூன்யம் என அறிகிறார் .மரணத்திற்கு முன் ஒரு நற்செயல் செய்து இந்த வாழ்வை அர்த்தப்படுத்த வேண்டும் என நினைக்கிறார்.

கோட்டைக்குச் செல்லும் வழியில், மக்களைத் தன் நகைச்சுவை உணர்வால் மகிழ்ச்சியடைய வைக்கும் நாடகக்  கலைஞனை சந்திக்கிறார்.. அந்த நாடகக் கலைஞன் ஒரு குழந்தையைப்போல இவ்வுலகை எந்தவித வெறுப்புமின்றி பார்ப்பவன்.

அவனுக்கு மனைவியும் ,குழந்தையும் இருக்கிறார்கள். தளபதி அவர்களுடன்  மகிழ்ச்சியாக நேரத்தை  கழிக்கிறார்.

நாடகக் கலைஞனின் குடும்பத்தை பிளேக் நோயிலிருந்து தப்பிக்க வழிசெய்வதே உண்மையில் தன் வாழ்வில் அர்த்தமுள்ள செயலாக இருக்கும் அதுவே வாழ்வில் ஒரு நிறைவைத் தரும் என உணர்ந்து அவர்கள் பிளேக் நோயிலிருந்து தப்பிக்க உதவி செய்கிறார் ..

 நாடகக் கலைஞனின் குடும்பத்தை பிளேக் நோயிலிருந்து தப்பிக்க வைத்துவிட்டு  தன் நண்பர்களுடன் தனக்காகக் கோட்டையில் காத்திருக்கும் மனைவியைச் சந்திக்கிறார் ...

கோட்டையில் உள்ள எல்லோரையும் பிளேக் வடிவில்  மரணம் சொர்க்கத்துக்கு அழைத்துச் சென்று நடனமாடுகிறது ..இந்த நடனம்  வேறு பாதையில் தப்பித்து சென்ற நாடக கலைஞனின் கண்களுக்கு மட்டும் தெரிவதோடு படம் நிறைவடைகிறது.

கடவுளைக் காப்பாற்றத்தான் ஆயிரக்கணக்கானவர்கள்  போருக்குச் சென்றனர். இஸ்லாமியர்களைக் கொன்றனர் .ஆனால் கடவுளைக் காப்பாற்றப் போருக்குச் சென்ற கிறிஸ்துவர்களை கடவுள் காப்பாற்றவில்லை .பிளேக் வடிவில் கொள்ளை நோய் ஆயிரக்கணக்கானவர்களை கொண்டு போகிறது .

கடவுள் மௌனமாக எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார் என்று சிலர் நயமாக சொல்லக்கூடும்.

உண்மையில் கடவுள் இல்லை என்பதைத் தான் இந்தச் சம்பவம் மெய்ப்பிக்கிறது.இல்லாத கடவுளை காப்பாற்றத் தான் இத்தனை ஆயிரம் பேர் போர்க்களத்தில் செத்தனர் .இவர்கள் அனைவரையும் மரணம் வெற்றிகொள்கிறது அல்லது தண்டிக்கிறது.கடவுள் நம்பிக்கையை உடையவரை போலத் தோன்றும் பர்க்மன்  உண்மையில் நாத்திகத்தை நெருங்கி வருகிறார் .

திரைப்படம் என்பது ஆயிரக்கணக்கானவர்களின் ரசனைக்குரிய கலைச்செயல். கோடிக்கணக்கானவர்களை பலிவாங்கிய உலகப்போரை கண்டவர் பர்க்மன். மனித வாழ்வுக்கு அர்த்தம் இல்லை என்பதை பர்க்மன் கண்டிருக்க வேண்டும் .

இந்த உணர்வோடு தான் இந்த அற்புதமான திரைப்படத்தை உருவாக்கியிருக்க  கூடும் .போர்,ஆணவம்,கடவுள் .,மதம் ,கோட்டை என்று வாழ்க்கை நடத்துபவன் வாழ்க்கைகான அர்த்தத்தைத்தேடுகிறான் .கடவுளைத் தேடுகிறான் .வாழ்க்கை ஒன்றுமில்லாத வெற்றுத் தேடல் என உணர்கிறான்.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
We detected that you're using an AdBlocker. Please disable it and refresh to continue using our website.
Ad