இளம் வீரர்களை எதிர்கொள்ள ரோஜர் பெடரரின் புது ஆயுதம்
அமெரிக்க ஓபனில் ஓர் புது புயல் மையம் கொண்டுள்ளது. அதற்கு SABR (Sneak Attack By Roger). என பெயர் சூட்டப்பட்டுள்ளது. டென்னிஸ் உலகின் ஜாம்பவன் ரோஜர் பெடரரின் டென்னிஸ் மட்டையில் இருந்துதான் அந்த புயல் உருவாகிறது.பெடரர்க்கு அறிமுகம் தேவையில்லை.கிரிக்கெட்டுக்கு ஓர் சச்சின்,கூடைபந்துக்கு ஓர் மைக்கேல் ஜோர்டான் போல டென்னிஸ்க்கு பெடரர்.
கடந்த 2003ஆம் ஆண்டு விம்பிள்டனில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டம் வென்ற பெடரர் அன்று முதல் டென்னிஸ் உலகின் முடிசூடா மன்னன் ஆக வலம் வருகிறார்.டென்னிஸ் உலகில் 17 கிராண்ட் ஸ்லாம்களை வென்றுள்ள பெடரர்க்கு நடால்,முரே,ஜோகோவிச் முதலிய இளம் வீரர்களின் வருகையால் கிராண்ட் ஸ்லாம் பட்டங்கள் எட்டாக் கனியானது
ஆண்டின் கடைசி கிராண்ட் ஸ்லாம் போட்டியான அமெரிக்க ஓபன் தற்போது நியூயார்க்கில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் பெடரரின் SABR(Sneak Attack By Roger)என்றும் 'பெட் அட்டாக்' எனவும் அழைக்கப்படும் இந்த தந்திரம் எதிராளியை நிலைகுலைய வைக்கிறது.
தற்போது இளம் வீரர்களுக்கு இணையாக தனது ஆட்ட நுணுக்கத்தை பெடரர் மாற்றிக் கொண்டு வருகிறார். அதில் ஒன்றுதான் SABR எனப்படுவது. அதாவது எதிராளியின் சர்வை முன்னோக்கி சென்று எதிர்கொள்வது. சர்வீசை அதன் போக்கில் விட்டு எடுக்காமல் அதனை முன்னே சென்று எதிர்கொள்ளும் இந்த புது யுத்தி பெடரரின் எதிராளிகளை ரொம்பவே திணறடிக்கிறது. சர்வ் செய்து விட்டு எதராளி நிலை கொள்ளும் முன், பெடரரிடம் இருந்து பந்து திரும்பி விடுகிறது.
நடப்பு அமெரிக்கத் தொடரில் முரே,நடால் தோற்று விட்டதால் அனைவரது கவனமும் பெடரர் மற்றும் ஜோகோவிச் மீதே உள்ளது .ஒருவேளை இறுதியாட்டத்தில் ஜோகோவிச்சை எதிர்கொள்ள நேரிட்டால், இதே ஆட்ட நுணுக்கத்தை கையாள பெடரர் முடிவு செய்துள்ளார்.