சினிமா துறையினர் அதிர்ச்சி : இந்த வருடம் ஒன்பது படங்கள் மட்டுமே லாபம் சம்பாதித்து உள்ளன
இந்தாண்டு இதுவரை வெளியான 103 படங்களில் 9 படங்கள் மட்டுமே லாபம் சம்பாதித்துக் கொடுத்துள்ளன என்று தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் முதல் தமிழ்த்திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆதரவு பெற்று இதுவரை 103 படங்கள் வெளியாகியுள்ளன. அதில் பெரிய பட்ஜெட் படங்கள் 23, மீடியம் மற்றும் சிறிய பட்ஜெட் படங்கள் 80. ஆக இந்த 103 படங்களுக்காக தயாரிப்பாளர்கள் செலவு செய்துள்ள மொத்த தொகை ரூ.750 கோடியாகும். மேலும், சினிமாவை நம்பி 750 கோடி செலவு செய்த தயாரிப்பாளர்களில் பெருவாரியானவர்கள்,அதாவது 90 சதவிகிதத்தினர் நஷ்டத்தையே சந்தித்துள்ளனர். அதோடு இந்த 103 படங்களில் 20 பெரிய பட்ஜெட் படங்களும், 4 சிறிய பட்ஜெட் படங்களும் மட்டுமே சேட்டிலைட்டுக்கு விற்பனையாகியுள்ளது. மற்றபடி எந்த படங்களையும் சேனல்கள் வாங்காமல் தேங்கிக்கிடக்கின்றன. முக்கியமாக, கடந்த 10 மாதங்களில் வெளியான 103 படங்களில் தயாரிப்பாளர்களுக்கு லாபம் கொடுத்த படங்கள் என்றால் வெறும் 9 படங்கள் மட்டுமே. விநியோகஸ்தர்களுக்கும் இந்த படங்கள்தான் லாபமாக அமைந்தன. மற்ற படங்கள் அனைத்துமே தயாரிப்பாளர், விநியோகஸ்தர்கள் என அனைருக்குமே பெருத்த நஷ்டத்தையே கொடுத்துள்ளன" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் திரையுலகம் அதிர்ச்சியில் உள்ளது. 103 படங்களில் வெறும் 9 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டி கொடுத்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள்,குறிப்பாக சிறிய மற்றும் நடுத்தர தயாரிப்பாளர்கள் தரப்பில் மட்டுமல்லாது, நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் மத்தியிலும் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.