‘இது நம்ம ஆளு’ பட விவகாரம்
‘இது நம்ம ஆளு’ பட விவகாரம்:
இயக்குநர் பாண்டிராஜ் - சிம்பு
குடும்பத்தினர் மோதல்!
இது நம்ம ஆளு பட விவகாரம் தொடர்பாக இயக்குநர் பாண்டிராஜ் - சிம்பு குடும்பத்தினர் இடையே மோதல் எழுந்துள்ளது. இரு தரப்பினரும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து நிலைமையை விளக்கப் போவதாகக் கூறியுள்ளார்கள்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா, சூரி நடிப்பில் உருவாகி வரும் படம், 'இது நம்ம ஆளு'. குறளரசன் இசையமைத்துள்ளார்.
பேட்டிகளில் மோதல்
தயாரிப்பாளர்கள் சங்கத்திடம் நயன்தாரா
குறித்து டி.ஆர். புகார் தெரிவித்ததாக முதலில் செய்திகள் வெளிவந்தன. ஆனால் நயன்தாரா மீது புகார்
தெரிவிக்கவில்லை என சிம்பு விளக்கம் அளித்தார்.
இதுதொடர்பாக அவர் அளித்த ஒரு பேட்டியில்
கூறியதாவது: நயன்தாராவைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. அவருடைய மீதிச் சம்பளமான 50
லட்சத்தைத் தரவும் மீதமுள்ள இரு பாடல்களுக்குத் தேதிகள் வாங்கவும்
தாயாரிப்பாளர்கள் சங்கத்தை அணுகினோம். சங்கத்திடம் பணம் தந்து அவருடைய தேதிகளை
வாங்கித் தரச் சொன்னோம். இதுபற்றி கடிதம் எழுதித் தரச் சொன்னார்கள். அப்படியே கொடுத்தோம்.
அது எப்படி புகார் ஆகும்? நயன்தாரா தேதி கொடுத்தால் அந்த இரண்டு பாடல்களையும்
படமாக்குவோம். இல்லாவிட்டால் அவை இல்லாமல் படத்தை வெளியிடுவோம். எனக்கு யார்
மீதும் எந்தப் புகாரும் இல்லை. நயன்தாரா எப்போதும் என் நண்பராக இருப்பார் என்றார்.
இந்தப் பிரச்னை தொடர்பாக ஓர் நாளிதழுக்கு
இயக்குநர் பாண்டிராஜ் பேட்டியளித்தார். அதில், ‘இது நம்ம ஆளு' படத்தைப் பொறுத்தவரை
படப்பிடிப்பு முடிந்துவிட்டது. டி.ஆர் கூறுவது குத்துப் பாடல் தொடர்பானது.
அப்பாடல் படத்துக்கு தேவையில்லை, நயன்தாரா மற்ற படங்களை விட இந்தப்படத்துக்கு
அதிகமான தேதிகளைக் கொடுத்துவிட்டார். குறளரசன் இன்னமும் 3 பாடல்களை
முடித்துக்கொடுக்கவேண்டும்’ என்றார்.
இதற்குப் பதிலடியாக சிம்பு ஒரு பேட்டியில், ‘இயக்குநராக பாண்டிராஜ்
மீது மரியாதை உண்டு. நானோ என் தந்தையோ அப்பாடலைக் கேட்டோம் என்பதை விடவும் இன்று
எல்லாப் படங்களுக்கும் ஒரு குத்துப் பாடல் தேவைப்படுகிறது. இது நம்ம ஆளு பாடல்கள்
வெளிவந்தால் குறளின் விதியை யாராலும் மாற்றமுடியாது. அந்தளவுக்குப் பாடல்கள் மிக
அற்புதமாக உள்ளன என்றார்.